/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/தீவிரம்! பொன்னேரியில் தங்கிய குப்பை அகற்றம்... டூ தீவிரம்! பொன்னேரியில் தங்கிய குப்பை அகற்றம்... டூ
தீவிரம்! பொன்னேரியில் தங்கிய குப்பை அகற்றம்... டூ
தீவிரம்! பொன்னேரியில் தங்கிய குப்பை அகற்றம்... டூ
தீவிரம்! பொன்னேரியில் தங்கிய குப்பை அகற்றம்... டூ
ADDED : ஜன 27, 2024 11:30 PM

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி நகராட்சியில், 27 வார்டுகளில் உள்ள, 10,027 குடியிருப்புகள், 1,721 வணிக நிறுவனங்களில் இருந்து, தினமும், 11,000 கிலோ குப்பை கழிவுகள் வெளியேற்றப்படுகின்றன.
இவை திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் வாயிலாக தரம் பிரிக்கப்படுகின்றன. மட்கும் குப்பையில் இயற்கை மற்றும் மண்புழு உரங்கள் தயாரிக்கப்படுகின்றன. மட்காதவை பிரித்து எடுக்கப்பட்டு மறுசுழற்சிக்கு அனுப்பப்படுகின்றன.
மலைபோல்
இத்திட்டம் செயல்படுத்துவற்கு முன், பொன்னேரி பஞ்செட்டி சாலை அருகே, ஆரணி ஆற்றின் கரையோரங்களில் கொட்டப்பட்ட குப்பை கழிவுகள் மலைபோல் குவிந்து இருக்கின்றன.
கடந்த, 30ஆண்டுகளாக இவை இங்கு கொட்டி குவிக்கப்பட்டதால், அப்பகுதியில் மண்ணின் வளம் பாதித்து, சுற்றுச்சுழலுக்கு கேடு விளைவித்து வருகிறது.
நகராட்சி நிர்வாக கணக்கெப்பின்படி, இப்பகுதியில் 5 ஏக்கர் பரப்பில். 26,435 கன அடி அளவில், இவை குவிந்து இருப்பது தெரிந்தது.சுற்றுச்சூழல் பாதுகாப்பு கருதி, துாய்மை இந்தியா 2.0 திட்டத்தின் கீழ், 'பயோமைனிங்' முறையில் மேற்கண்ட கழிவுகளை அகற்ற நகராட்சி திட்டமிட்டது. அதற்காக, 1.86 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, கடந்த ஆண்டு பணிகளை துவக்கியது.
தனியார் ஒப்பந்த நிறுவனத்தின் வாயிலாக, மேற்கண்ட கழிவுகளை ரோலர், கன்வேயர், இரும்பு சல்லடைகள் ஆகியவற்றின் உதவியுடன் தரம் பிரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
ரோலர் இயந்திரங்கள்
குவிந்து கிடக்கும் கழிவுகளை, ஜே.சி.பி., இயந்திரம் உதவியுடன் கிளறி உலற வைக்கப்பட்டு, பின், அவை ரோலர் இயந்திரங்களில் கொட்டப்படுகின்றன.
கன்வேயர் பெல்ட் வாயிலாக கழிவுகள் ரோலர் இயந்திரங்களுக்கு செல்லும்போது, அதில் உள்ள சல்லடைகள் வழியாக மண், கல், பிளாஸ்டிக் என தனித்தனியாக பிரிகிறது. பிரித்தெடுக்கப்படும் கல், கண்ணாடி, இரும்பு உள்ளிட்டவைகளை ஒரு பகுதியிலும், மண் குவியல் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை தனியாகவும் வைக்கப்படுகின்றன.
இதுவரை, 9,000 கன அடி அளவு குப்பை கழிவுகள் பிரித்தெடுக்கப்பட்டு உள்ளன. தொடர்ந்து அங்கு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்படுகின்றன. அடுத்த நான்கு மாதத்திற்குள் அங்குள்ள குப்பையை அகற்றி, நிலப்பகுதிகள் முழுமையாக மீட்டெடுக்க நகராட்சி நிர்வாகம் இலக்கு நிர்ணயித்து பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இது குறித்து பொன்னேரி நகராட்சி கமிஷனர் எஸ்.கோபிநாத் தெரிவித்ததாவது:
கடந்த ஆண்டு பணிகள் துவங்கிய நிலையில் மழையால், கழிவுகளை தரம் பிரிப்பதில் தொய்வு ஏற்பட்டது.
சாலை பணிகள்
தற்போது வெயில் துவங்கி உள்ளதால், பணிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. இனிவரும் நாட்கள் கோடைக்காலம் என்பதால், பணிகள் மேற்கொள்வது எளிதாக இருக்கும். நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் பணிகளை முடித்து விடுவோம்.
தற்போது குப்பை கழிவுகளில் இருந்து பிரிக்கப்படும் மண், கல் உள்ளிட்டவை சாலை பணிகளுக்கு பயன்படுத்தப்படுகின்றன. பிளாஸ்டிக் கழிவுகள் சிமென்ட் தயாரிப்பு நிறுவனங்களுக்கு அனுப்பப்படுகின்றன.
அண்ணா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் வழிகாட்டுதல்களை பின்பற்றி சுற்றுசுழலுக்கு பாதிப்பு இல்லாமல் பணிகள் நடைபெறுகின்றன.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.