Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ ராமோஜி ராவ் காலமானார்: தலைவர்கள் இரங்கல்

ராமோஜி ராவ் காலமானார்: தலைவர்கள் இரங்கல்

ராமோஜி ராவ் காலமானார்: தலைவர்கள் இரங்கல்

ராமோஜி ராவ் காலமானார்: தலைவர்கள் இரங்கல்

UPDATED : ஜூன் 08, 2024 05:45 PMADDED : ஜூன் 08, 2024 08:30 AM


Google News
Latest Tamil News

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில், அனுமதிக்கப்பட்டிருந்த ராமோஜி பிலிம் சிட்டி தலைவர் ராமோஜி ராவ் இன்று (ஜூன் 08) சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 87.

தென்னிந்தியத் திரையுலகத்தில் மிகப் பிரம்மாண்டமான திரைப்பட நகரமான ராமோஜி பிலிம் சிட்டியை 1996ம் ஆண்டு ஐதராபாத் புறநகர்ப் பகுதியில் அமைத்தவர் ராமோஜி ராவ். சுமார் 1666 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள உலகத்தின் மிகப் பெரிய திரைப்பட நகரம் இது. பிரம்மாண்டமான அரங்குகள், நட்சத்திர ஹோட்டல்கள் மற்ற தொழில்நுட்ப வசதிகள் என அமைந்த ஸ்டுடியோ. இந்தியத் திரையுலகத்தின் பல்வேறு மொழிப் படங்களும் அங்கு தயாராகி வருகிறது. அப்படிப்பட்ட ஒரு ஸ்டுடியோவை நிர்மாணித்தவரும், மார்கதரசி சிட்பண்டு, ஈநாடு செய்தித்தாள், ஈடிவி நெட்வொர்க், ராமாதேவி பப்ளிக் பள்ளி, பிரியா புட்ஸ், கலன்ஜலி, உஷாகிரண் மூவிஸ் ஆகியவற்றை நிறுவியவருமான ராமோஜி ராவ் வயது மூப்பின் காரணமாக இன்று அதிகாலை மறைந்தார். அவருக்கு வயது 87. ஆந்திராவில் செயல்படும் டால்பின் ஓட்டல் குழுமத்தின் தலைவராகவும் இருந்தார்.

பத்ம விபூஷண் விருது பெற்றவர்


கடந்த சில நாட்களாகவே உடல் நலக் குறைவு ஏற்பட்டு ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆந்திராவில் உள்ள கிருஷ்ணா மாவட்டத்தில் பெத்தபருப்புடி என்ற கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் 1936ம் ஆண்டு நவ.,16ல் பிறந்தவர். ஆந்திர, தெலுங்கானா மாநில அரசியலிலும் சக்தி வாய்ந்த நபராக இருந்தவர். 2016ம் ஆண்டு மத்திய அரசு அவருக்கு பத்ம விபூஷண் விருதை வழங்கியுள்ளது.

இரங்கல்


“ஸ்ரீவாரிக்கி பிரேமலேகா, மயூரி, பிரதிகடனா, மௌன போராட்டம், மனசு மமதா, சித்ரம், நுவ்வே காவாலி” உள்ளிட்ட படங்களைத் தயாரித்தவர். 'பிரதிகடனா' என்ற படம் 'பூ ஒன்று புயலானது' என்ற பெயரில் தமிழில் டப்பிங் ஆகி இங்கும் பெரும் வரவேற்பு பெற்று ஓடியது. அவர் தயாரித்த படங்கள் ஆந்திர மாநில நந்தி விருதுகள், தேசிய விருதுகள் உள்ளிட்டவற்றைப் பெற்றுள்ளது. ராமோஜி ராவ் மறைவுக்கு அரசியல் பிரபலங்களும், சினிமா பிரபலங்களும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ராமோஜி ராவ் உடலுக்கு தெலுங்குதேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

பிரதமர் மோடி இரங்கல்

பிரதமர் மோடி எக்ஸ் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவு: ''ஸ்ரீ ராமோஜி ராவ் மறைவு மிகவும் வருத்தமளிக்கிறது. இந்திய ஊடகத்தில் புரட்சியை ஏற்படுத்திய தொலைநோக்கு பார்வையாளராக இருந்தார். அவரது பங்களிப்புகள் பத்திரிகை மற்றும் திரைப்பட உலகில் அழியாத முத்திரையை பதித்துள்ளன. இந்த கடினமான நேரத்தில் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் எண்ணற்ற ரசிகர்களுக்கு இரங்கல்கள். ஓம் சாந்தி''. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இவரது மறைவுக்கு தெலுங்கானா மாநில பா.ஜ., தலைவரும், அக்கட்சியின் எம்பியுமான கிஷன் ரெட்டி இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் ஸ்டாலின், காங்கிரஸ் எம்.பி., ராகுல் உள்ளிட்ட தலைவர்களும் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us