Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/சாய்கங்கை கால்வாயில் மணல் லாரிகள் ஆக்கிரமிப்பு கால்வாய் சேதமடைந்தால் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்

சாய்கங்கை கால்வாயில் மணல் லாரிகள் ஆக்கிரமிப்பு கால்வாய் சேதமடைந்தால் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்

சாய்கங்கை கால்வாயில் மணல் லாரிகள் ஆக்கிரமிப்பு கால்வாய் சேதமடைந்தால் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்

சாய்கங்கை கால்வாயில் மணல் லாரிகள் ஆக்கிரமிப்பு கால்வாய் சேதமடைந்தால் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்

ADDED : மார் 24, 2025 02:51 AM


Google News
Latest Tamil News
ஊத்துக்கோட்டை, :சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய, தமிழக - ஆந்திர மாநில அரசுகள் இடையே, 1983ம் ஆண்டு கிருஷ்ணா நதி நீர் ஒப்பந்தம் போடப்பட்டது. அதன்படி, ஆந்திர மாநிலம், கண்டலேறு அணையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் இரண்டு தவணைகளில், 12 டி.எம்.சி., கிருஷ்ணா நீர் தர வேண்டும்.

இதற்காக, கண்டலேறு அணையில் இருந்து வெங்கடகிரி, ராப்பூர், காளஹஸ்தி, வரதயபாளையம், சத்தியவேடு வழியே, தமிழக - ஆந்திர எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோ பாயின்ட் வழியே, 177 கி.மீ., துாரமுள்ள பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கம் வரை, கால்வாய் வெட்டும் பணி துவங்கி, 1996ம் ஆண்டு நிறைவு பெற்றது.

அதே ஆண்டு முதன்முறையாக கிருஷ்ணா நீர் தமிழகத்திற்கு கிடைத்தது. பின், கால்வாய் சிலாப்புகள் சேதம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தண்ணீர் வர, 15 நாட்கள் ஆனது. பின், சத்யசாய் அறக்கட்டளை சார்பில், கண்டலேறு அணை - பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கம் வரை கால்வாய் சீரமைக்கப்பட்டது.

இதனால், மூன்று நாட்களில் கிருஷ்ணா நீர் தமிழகத்திற்கு வந்து கொண்டு இருக்கிறது. இதனால், கிருஷ்ணா நதிநீர் கால்வாய், சாய்கங்கை கால்வாய் என அழைக்கப்படுகிறது.

ஆந்திர மாநிலம், மதனஞ்சேரி பகுதியில் கிராவல் குவாரி செயல்பட்டு வருகிறது. தினமும், 300க்கும் மேற்பட்ட லாரிகள், கிராவல் மணல் ஏற்றிக் கொண்டு, தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோ பாயின்ட் வழியே சாய்கங்கை கால்வாயில் பயணித்து, முக்கிய சாலை வழியே பெரியபாளையம், கன்னிகைப்பேர், சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்கின்றன.

ஒவ்வொரு ஆண்டும் கால்வாய் பராமரிப்பிற்காக குறிப்பிட்ட தொகையை தமிழக அரசு, ஆந்திராவிற்கு செலுத்துகிறது. இந்நிலையில், கிருஷ்ணா நதி நீர் அதிகாரிகள், மணல் ஏற்றிச் செல்லும் லாரிகளை சாய்கங்கை கால்வாய் வழியே செல்ல அனுமதி அளித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மணல் லாரிகள் வேகமாக செல்வதால், கால்வாய் சிலாப்புகள் சரிந்து, கற்கள் பெயர்ந்து கால்வாயில் விழுகின்றன. இதனால், வரும் கால கட்டத்தில் கிருஷ்ணா நீர் தமிழகத்திற்கு பெறுவது பெரும் சிக்கலாகி விடும்.

எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

லாரிகளில் ஏற்றி வரப்படும் மணலின் எடையை பொறுத்து அனுமதி வழங்கப்படுகிறது. தற்போது, அனுமதி அளித்த நாள் முடிந்தும் லாரிகள் இயக்கப்பட்டதால், சில நாட்களுக்கு முன் சாய்கங்கை கால்வாய் வழியே லாரிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

நீர்வள ஆதார துறை அதிகாரி,

சென்னை.

அதிகாரிகளுக்கு கவனிப்பு!

சென்னை மக்களுக்கு குடிநீர் தேவைக்காக அமைக்கப்பட்ட கால்வாய் வழியே அதிகளவு பாரம் கொண்ட மணல் லாரிகள் இயக்குவதால், அடிக்கடி கால்வாய் சேதமடைகிறது. பலமுறை பணம் ஒதுக்கீடு செய்து, கால்வாய் சீரமைக்கும் பணி நடந்தாலும், அதிகாரிகளை 'கவனிப்பதால்' கால்வாய்களில் மணல் லாரி செல்ல அனுமதிக்கின்றனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us