Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/திருத்தணியில் குளம் போல் தேங்கிய மழைநீர்...தத்தளிப்பு!:யார் காரணம் என துறைகள் இடையே மோதல்

திருத்தணியில் குளம் போல் தேங்கிய மழைநீர்...தத்தளிப்பு!:யார் காரணம் என துறைகள் இடையே மோதல்

திருத்தணியில் குளம் போல் தேங்கிய மழைநீர்...தத்தளிப்பு!:யார் காரணம் என துறைகள் இடையே மோதல்

திருத்தணியில் குளம் போல் தேங்கிய மழைநீர்...தத்தளிப்பு!:யார் காரணம் என துறைகள் இடையே மோதல்

ADDED : ஜூன் 19, 2024 01:22 AM


Google News
Latest Tamil News
திருத்தணி:மாநில நெடுஞ்சாலையில் குளம்போல் மழைநீர் தேங்கி நிற்பதால், தினமும் வாகன ஓட்டிகள் கடும் சிரமப்படுகின்றனர். ரயில்வே நிர்வாகம் நகராட்சிக்கு அனுப்பிய எச்சரிக்கை கடிதம் தங்களின் கவனத்திற்கு கொண்டு வராதது தான், சாலையில் தேங்கும் மழைநீருக்கு காரணம் என, நெடுஞ்சாலைத் துறையினர் குற்றம்சாட்டுகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி பைபாஸ் சாலை சித்துார் சாலை, ம.பொ.சி. சாலை மற்றும் அரக்கோணம் சாலை வழியாகத் தான், திருத்தணி பேருந்து நிலையம், முருகன் மலைக்கோவில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, புதுச்சேரி ஆகிய இடங்களுக்கு அனைத்து வாகனங்கள் சென்று வருகின்றன.

இந்நிலையில், கடந்த, 15 நாட்களுக்கு மேலாக மழை பெய்தால், ம.பொ.சி.சாலை, பழைய சிண்டிகேட் வங்கி பகுதியில் மழைநீர் வெளியே செல்வதற்கு முடியாமல், மாநில நெடுஞ்சாலையில் குளம்போல் தேங்கி நிற்கிறது.

இதனால், வாகன ஓட்டிகள் கடும் சிரமப்படுகின்றனர். இரு சக்கர வாகனங்கள் மற்றும் நடந்து செல்பவர்கள் அவதியடைகின்றனர்.

அவதி


பெரும்பாலான மக்கள் ரயில் நிலையம், அரசு மற்றும் தனியார் வங்கிகள், எம்.எல்.ஏ., அலுவலகம், தலைமை தபால் நிலையம் ஆகிய இடங்களுக்கு ம.பொ.சி. சாலை வழியாகத்தான் சென்று வருகின்றனர். மழைநீர் தேங்கி நிற்பதால், ரயில் நிலையத்திற்கு செல்லும் பயணியர் கடும் அவதிப்படுகின்றனர்.

உதாரணமாக, திருத்தணி நகரில் தினமும் ஒரு மணி நேரம் பெய்யும் பலத்த மழையால் மலைமேடு, அக்கைய்யநாயுடு சாலை, ஸ்டேட் வங்கி, உச்சிபிள்ளையார் நகர் மற்றும் சுவால்பேட்டை ஆகிய இடங்களில் இருந்து வெளியேறும் மழைநீர், கழிவுநீருடன் கலந்து ம.பொ.சி. சாலையில் குளம்போல் தேங்கி நிற்கிறது.

இதில் கார், வேன், பேருந்துகள் தண்ணீரில் ஊர்ந்து செல்கின்றன.

இதற்கு காரணம், ஒரு மாதம் முன் வரை மழைநீர் ம.பொ.சி. சாலையில் இருந்து சிறுபாலம் வாயிலாக ரயில்வே நிர்வாகத்திற்கு சொந்தமான கால்வாயில் சென்று கொண்டிருந்தது.

கால்வாயில் அதிகளவில் மழைநீர், கழிவுநீர் கலந்து வருவதால், தண்ணீர் ரயில் தண்டவாளம் மற்றும் தானியங்கி கேட் பாதையில் வெள்ளமாக ஓடுகிறது.

இதனால், ரயில்களுக்கு குறித்த நேரத்தில் சிக்னல் கிடைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. இதனால், ரயில்வே நிர்வாகம் கால்வாய்க்கு நகராட்சியின் மழைநீர், கழிவுநீர் செல்லாத வகையில் அடைத்தனர்.

மாற்று ஏற்பாடு


மேலும், ரயில்வே நிர்வாகம் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பே, கால்வாயில் மழைநீர், கழிவுநீர் விடக்கூடாது என, எச்சரித்து நகராட்சி நிர்வாகத்திடம் கடிதம் வழங்கியுள்ளது.

ஆனால் அந்த கடிதத்தை, நெடுஞ்சாலை துறை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லாததால், ம.பொ.சி.சாலையில் மழைநீர் தேங்கி நிற்கிறது. முன்கூட்டியே கடிதம் காண்பித்திருந்தால், மாற்று ஏற்பாடு செய்திருப்போம் என, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

திருத்தணி நகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:

மழைநீர் நெடுஞ்சாலையில் தேங்கி நிற்பதால், அந்த தண்ணீரை அகற்றும் பணி நெடுஞ்சாலை துறையினர் தான் மேற்கொள்ள வேண்டும்.

மழைநீரை வெளியேற்றுவதற்கு உரிய கால்வாய் வசதி முன்கூட்டியே ஏற்படுத்திருக்க வேண்டும்.

தற்போது சாலையில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றுவதற்கு, எங்கள் ஊழியர்கள் மின்மோட்டார் வைத்து தண்ணீர் வெளியேற்றி வருகிறோம். சாலையில் தேங்கும் தண்ணீருக்கு நெடுஞ்சாலை துறையினர் தான் பொறுப்பு.

இவ்வாறு அவர் கூறினார்.

இது குறித்து திருத்தணி நெடுஞ்சாலை துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

ரயில்வே நிர்வாகம் எங்கள் கால்வாயில் தண்ணீர் செல்லக்கூடாது என, நகராட்சி நிர்வாகத்திற்கு எச்சரிக்கை கடிதம் அனுப்பி, பல மாதங்கள் ஆகிறது.

அந்த கடிதத்தை எங்களின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தால், வெள்ள நிவாரணம் திட்டத்தின் கீழ் புதிதாக மழைநீர் வடிகால்வாய் ஏற்கனவே அமைத்திருப்போம்.

ரயில்வே நிர்வாகம் கால்வாயை மூடிய பின்தான், நெடுஞ்சாலையில் தண்ணீர் தேங்கி நிற்பது எங்கள் கவனத்திற்கு வந்தது. சாலையில் மழைநீர் தேங்கி நிற்பதற்கு முழுக்க முழுக்க நகராட்சி நிர்வாகத்தின் அலட்சியம் தான் காரணம்.

தற்காலிகமாக ஓரிரு நாளில் மாற்று கால்வாய் அமைத்து, மழைநீர் தேங்காத படி கண்காணிக்கப்படும். நகராட்சி நிர்வாகமும், வருவாய் துறையினரும் எங்களுக்கு ஒத்துழைக்கவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

ரூ.1.87 கோடியில் மழைநீர் வடிகால்வாய்


ம.பொ.சி.சாலையில் தேங்கும் மழைநீரை நிரந்தரமாக வெளியேற்றுவதற்கு, 750 மீட்டர் நீளத்திற்கு, புதிதாக மழைநீர் கால்வாய் அமைக்க திட்டமிட்டுள்ளோம். அதற்கான திட்ட மதிப்பீடு, 1.87 கோடி ரூபாய் தேவை என தயார் செய்து, மாவட்ட நிர்வாகத்திற்கும், உயர் அதிகாரிகளுக்கும் பரிந்துரை செய்துள்ளோம். நிதி ஒதுக்கீடு கிடைத்தவுடன் பழைய சிண்டிகேட்வங்கியில் இருந்து, எம்.எல்.ஏ., அலுவலகம் அருகே உள்ள ஆலமரம் தெரு பகுதி வரை, மழைநீர் வடிகால்வாய் அமைத்து தண்ணீர் வெளியேற்றப்படும். இக்கால்வாய் பணிகள் முடிந்தால் எவ்வளவு மழை பெய்தாலும் ம.பொ.சி.சாலையில் தண்ணீர் தேங்கி நிற்காது.

- என்.ரகுராம்

நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர், திருத்தணி.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us