Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/திருத்தணி முருகன் கோவிலில் அரசியல்வாதிகள்...அடாவடி: விடுதியில் அறை கிடைக்காமல் பக்தர்கள் தவிப்பு

திருத்தணி முருகன் கோவிலில் அரசியல்வாதிகள்...அடாவடி: விடுதியில் அறை கிடைக்காமல் பக்தர்கள் தவிப்பு

திருத்தணி முருகன் கோவிலில் அரசியல்வாதிகள்...அடாவடி: விடுதியில் அறை கிடைக்காமல் பக்தர்கள் தவிப்பு

திருத்தணி முருகன் கோவிலில் அரசியல்வாதிகள்...அடாவடி: விடுதியில் அறை கிடைக்காமல் பக்தர்கள் தவிப்பு

ADDED : செப் 01, 2025 01:20 AM


Google News
Latest Tamil News
திருத்தணி:திருத்தணி முருகன் கோவிலுக்கு சொந்தமான தேவஸ்தான விடுதிகளில் திருமண முகூர்த்த நாள், முக்கிய விழா போன்ற நாட்களில், பக்தர்கள் தங்குவதற்கு அறைகள் கிடைக்காமல் பரிதவித்து வருகின்றனர். உள்ளூர் மற்றும் அரசியல் பிரமுகர்கள், அனைத்து அறைகளையும் எடுத்துக் கொள்வதால், வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்கள் அறைகள் கிடைக்காமல் கடும் சிரமப்படுகின்றனர். எனவே, நிறுத்தப்பட்ட அறைகள் முன்பதிவை மீண்டும் துவக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி சுப்ரமணிய சுவாமி கோவிலுக்கு தமிழகம், ஆந்திரா, கர்நாடகாக உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து, தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மூலவர் முருகப்பெருமானை தரிசித்து செல்கின்றனர்.

சில பக்தர்கள் இரவு தங்கி, நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர். இதற்காக, கோவில் நிர்வாகம் சார்பில், பக்தர்களுக்கு குறைந்த வாடகையில் குடில்கள் மற்றும் அறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

அந்த வகையில், திருத்தணி பேருந்து நிலையம் அருகே தணிகை இல்லத்தில், 39 குளிர்சாதன குடில்கள், 48 அறைகள் உள்ளன.

மலைப்பாதை எதிரில் கார்த்திகேயன் இல்லத்தில், 52 குடில்கள், 48 அறைகள், மலையடிவாரத்தில் திருக்குளத்தில் உள்ள சரவணபொய்கை இல்லத்தில், 39 அறைகள் உள்ளன.

கோவில் நிர்வாகம் ரத்து


ஐந்து ஆண்டுகளுக்கு முன் வரை குடில்கள் மற்றும் அறைகள், 'ஆன்-லைன்' மூலம் முன்பதிவு செய்யும் முறை கடைப்பிடிக்கப்பட்டது.

இதனால், பக்தர்கள் தாங்கள் இருக்கும் ஊரில் இருந்தே, முன்கூட்டியே அறைகளை முன்பதிவு செய்துவிட்டு, கோவிலுக்கு வந்து முருகப் பெருமானை வழிபட்டு தங்கிச் செல்வர்.

கொரோனா தொற்று காரணமாக, 2019 முதல் தேவஸ்தான அறைகள் எடுப்பதற்கு 'ஆன்-லைன்' முன்பதிவு செய்யும் முறையை, கோவில் நிர்வாகம் ரத்து செய்தது. பக்தர்கள் நேரில் வந்து அறைகள் எடுத்து தங்கும் நிலை தொடர்ந்து வருகிறது.

குறிப்பாக, திருமண முகூர்த்த நாள், கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களின் போது, உள்ளூர் பிரமுகர்கள் மற்றும் அரசியல்வாதிகள் சிபாரிசு பேரில், கோவிலின் அனைத்து விடுதிகளிலும் உள்ள அறைகளை, தனிநபர்கள் எடுத்துக் கொள்கின்றனர்.

இதனால், திருத்தணி கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அறைகள் கிடைக்காமல் ஏமாற்றம் அடைகின்றனர். சில பக்தர்கள் தனியார் விடுதிகளில் அதிக கட்டணம் செலுத்தி தங்குகின்றனர்.

எனவே, பக்தர்கள் நலன் கருதி கோவில் நிர்வாகம் மீண்டும் அறைகள் முன்பதிவு செய்வதற்கு, 'ஆன்-லைன்' வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆன்லைன் முன்பதிவு


இதுகுறித்து திருத்தணி கோவில் அதிகாரி கூறியதாவது:

தணிகை இல்லம் மற்றும் சரவணபொய்கை ஆகியவை பழுது பார்க்கும் பணிகள் முடிந்து, கடந்த நான்கு மாதங்களுக்கு முன் தான் பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளோம்.

கார்த்திகேயன் இல்லம் சீரமைக்கும் பணிகள், ஒரு மாதத்திற்கு முன் துவங்கி நடந்து வருகிறது. இப்பணிகள் முடிந்ததும், மீண்டும் ஆன்--லைன் முன்பதிவு துவங்கப்படும். இதற்கு முன் தனியார் நிறுவனத்தின் வாயிலாக, ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து வந்தோம்.

தற்போது, ஹிந்து அறநிலைய துறையின் மூலம் புதிய செயலி உருவாக்கி, தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களுக்கும் அறைகள், அபிஷேகம் மற்றும் சேவை டிக்கெட்டுகள் பெற புதிய வசதி ஏற்படுத்தப்படவுள்ளது. இந்தாண்டிற்குள் புதிய செயலி நடைமுறைக்கு வரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

உள்ளூர் பிரமுகர்கள் ஆக்கிரமிப்பு
திருத்தணி நகரத்தில், 200க்கும் மேற்பட்ட திருமண மண்டங்கள் உள்ளதால், முகூர்த்த நாட்களில் திருமணத்திற்கு வரும் உறவினர்கள் தங்க, பெரும்பாலானோர் கோவில் விடுதிகளை தேர்வு செய்து, முன்கூட்டியே கோவில் அதிகாரிகள் ஒத்துழைப்போடு, உள்ளூர் முக்கிய பிரமுகர்கள், அரசியல்வாதிகள் பெயரில், அறைகளை முன்பதிவு செய்கின்றனர். இதனால், அன்றைய நாளில் முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்கள், அறைகள் கேட்கும் போது கிடைப்பதில்லை. ஏற்கனவே, 'முன்பதிவு செய்துவிட்டோம்' எனக் கூறி, பக்தர்களை விரட்டுகின்றனர். இதனால், பக்தர்கள் தங்க வசதியின்றி தவித்து வருகின்றனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us