Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/பரந்துார் புது விமான நிலையம் நிலம் எடுப்பு பணிகள் துவக்கம்

பரந்துார் புது விமான நிலையம் நிலம் எடுப்பு பணிகள் துவக்கம்

பரந்துார் புது விமான நிலையம் நிலம் எடுப்பு பணிகள் துவக்கம்

பரந்துார் புது விமான நிலையம் நிலம் எடுப்பு பணிகள் துவக்கம்

ADDED : பிப் 24, 2024 08:40 PM


Google News
சென்னை:காஞ்சிபுரம் மாவட்டம் பரந்துாரில், புதிய விமான நிலையத்திற்காக நிலம் எடுக்கும் பணிக்கு, தமிழக தொழில் துறை , அதிகாரப்பூர்வ முதல் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

சென்னை, மீனம்பாக்கத்தில் உள்ள விமான நிலையத்திற்கு வரும் பயணியர் எண்ணிக்கை, தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதற்கு ஏற்ப, கூடுதல் விமானங்களை இயக்க வேண்டியுள்ளது.

இதனால், சென்னையின் இரண்டாவது விமான நிலையம், பரந்துாரில் அமைய உள்ளது. இதற்கு, சுற்றியுள்ள 20 கிராமங்களில், 5,250 ஏக்கர் நிலம் தேவை.

இதில், 1,500 ஏக்கர் அரசு நிலம்; மீதி, பட்டாதாரர்களிடம் இருந்து வாங்கப்பட உள்ளது.

பரந்துார் விமான நிலையம் அறிவிப்பு, கடந்த 2022 ஆகஸ்டில் வெளியானது. அதன் பணிகளை மேற்கொள்ளும் முகமையாக, 'டிட்கோ' எனப்படும் தமிழக தொழில் வளர்ச்சி நிறுவனம் உள்ளது.

இந்நிறுவனம், விமான நிலையம் அமைக்க தேவையான விரிவான தொழில்நுட்பம், செலவு குறித்த ஆய்வை, ஒப்பந்த நிறுவனம் ஒன்றின் வாயிலாக மேற்கொள்கிறது.

தற்போது அந்நிறுவனம், வரைவு அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. அதேநேரம், பரந்துார் விமான நிலைய திட்டத்திற்கு, உள்ளூர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவர்களை சென்னை, தலைமை செயலகத்திற்கு அழைத்து, கூடுதல் இழப்பீடு வழங்குவது உள்ளிட்டவை தொடர்பாக, அமைச்சர்கள் பேச்சு நடத்தினர்; அதில் தீர்வு ஏற்படவில்லை.

விமான நிலையம் அமைய உள்ள இடத்தில் நிலங்களை எடுப்பதற்கு, தமிழக அரசு நிர்வாக அனுமதியை, கடந்த 2023 நவம்பரில் வழங்கி உத்தரவிட்டது.

இந்த பணிக்காக, மாவட்ட வருவாய் அதிகாரிகள், துணை கலெக்டர்கள் தலைமையில், பல குழுக்களை அரசு நியமித்தது. இந்நிலையில், பரந்துார் விமான நிலையத்திற்கு நிலம் எடுப்பதற்கான முதல் அறிவிப்பை, தொழில் துறை நேற்று வெளியிட்டுள்ளது.

அதில், 20 கிராமங்களில் முதலாவதாக, காஞ்சிபுரத்தில் உள்ள பொடவூர் கிராமத்தில் நிலம் எடுக்கப்பட உள்ளது.

இதுகுறித்து, தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

விமான நிலையத்திற்கு நிலம் கையகப்படுத்தும் பணியில் முதலாவதாக, பொடவூர் கிராமத்தில், 93 ஏக்கர் நிலம், 218 நபர்களிடம் இருந்து வாங்கப்பட உள்ளது.

இதற்கு, பொது அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில், நிலத்தின் உரிமையாளர்களுக்கும் தனித்தனியே,'நோட்டீஸ்' தரப்படும். அவர்கள், 30 நாட்களுக்குள் ஆட்சேபனை தெரிவிக்கலாம்.

அதன் மீது, ஏப்., 4ம் தேதி விசாரணை நடத்தப்படும். அரசு அறிவித்தபடி நிலம் வழங்குவோருக்கு, சந்தை மதிப்பை விட கூடுதல் இழப்பீடு வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us