/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ கும்மிடியை சூழும் தொழிற்சாலை புகை மாசை கட்டுப்படுத்துவதில் அலட்சியம் கும்மிடியை சூழும் தொழிற்சாலை புகை மாசை கட்டுப்படுத்துவதில் அலட்சியம்
கும்மிடியை சூழும் தொழிற்சாலை புகை மாசை கட்டுப்படுத்துவதில் அலட்சியம்
கும்மிடியை சூழும் தொழிற்சாலை புகை மாசை கட்டுப்படுத்துவதில் அலட்சியம்
கும்மிடியை சூழும் தொழிற்சாலை புகை மாசை கட்டுப்படுத்துவதில் அலட்சியம்
ADDED : செப் 21, 2025 11:49 PM

கும்மிடிப்பூண்டி;கும்மிடிப்பூண்டியில் இயங்கும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் மாசு கலந்த புகை, காற்றில் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்காமல், மாசு கட்டுப்பாட்டு வாரியம் அலட்சியமாக இருப்பதாக, சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டை மற்றும் அதை சுற்றியுள்ள கிராம பகுதிகளில், 280 தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.
அவற்றில், 40க்கும் மேற்பட்ட இரும்பு உருக்கு ஆலைகள், நிலக்கரியில் இருந்து மின் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள், பழைய டயர்கள், கார்பன் துகள் தயாரிப்பு தொழிற்சாலை, நச்சு கழிவுகளை சேகரித்து எரிக்கும் நிலையம், எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் உட்பட, காற்றில் மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகள் அதிகளவில் இயங்கி வருகின்றன.
இந்த தொழிற்சாலைகள் பெரும்பாலும் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டு இயங்குவது கிடையாது என, அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
குறிப்பாக, தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் புகை, பல வடிகட்டுதல் முறைகளுக்கு உட்படுத்தி, மிக உயரமான புகை போக்கி வழியாக வெளியேற்ற வேண்டும்.
இந்த வடிகட்டுதல் முறையால் ஏற்படும் பண விரயம் மற்றும் நேர விரயத்தை தவிர்க்கும் வகையில், புகை போக்கியை பயன்படுத்தாமல், மேற்கூரை வழியாக அப்படியே புகையை வெளியேற்றி வருகின்றனர்.
புகையுடன் வெளியேறும் நுண்ணிய கருந்துகள்கள், மக்கள் சுவாசிக்கும் காற்றில் கலந்து மாசடைகிறது. அந்த காற்றை சுவாசிக்கும் மக்கள், பல்வேறு உடல்நல பாதிப்புகளுக்கு ஆளாகி வருகின்றனர்.
கும்மிடிப்பூண்டி சிப்காட் வளாகத்தில் உள்ள மாவட்ட சுற்றுச்சூழல் அலுவலகமும், காற்று மாசுவை கட்டுப்படுத்த தவறுவதால், அப்பகுதி மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
பல ஆண்டுகளாக இந்த பிரச்னைக்கு தீர்வு காணப்படாத நிலையில், கடந்த மார்ச் மாதத்தில் வெளியான உலக காற்று தர அறிக்கை, பகுதி மக்களை அதிர்ச்சியடைய செய்தது.
சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த காற்று மாசுப்பாடு தொழில்நுட்ப நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்ட ஆய்வு அறிக்கையில், தமிழகத்தில் உள்ள நகரங்களில், அதிகளவில் நுண்ணிய மாசு துகள்கள் கலந்துள்ள பகுதிகளில், கும்மிடிப்பூண்டி முதல் இடத்தில் உள்ளது என, தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன்பின், கும்மிடிப்பூண்டியில் காற்றில் கலக்கும் மாசுவின் அளவை, தமிழக அரசு கட்டுப்படுத்தும் என, நம்பியிருந்த மக்களுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது.
கடந்த மாதம் இறுதியில், தொழிற்சாலையில் இருந்து வெளியேற்றப்பட்ட நச்சு புகையால், கும்மிடிப்பூண்டி அருகே சித்தராஜகண்டிகை அரசு உயர்நிலைப்பள்ளி வகுப்பறையில், நான்கு மாணவியர் மூச்சு திணறல் ஏற்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
சில நாட்களாக, கும்மிடிப்பூண்டி சிப்காட்டை சுற்றியுள்ள பகுதிகளில், தொழிற்சாலைகளின் புகை மண்டலம் சூழ்ந்து வருகிறது. இதனால், பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
மேலும் தாமதிக்காமல், காற்று மாசை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
மூன்று மாதம் அவகாசம் இதுகுறித்து, சுற்றுச்சூழல் துறை அலுவலர் கூறுகையில், 'கடந்த வாரம் தொழிற்சாலை நிர்வாகத்தினரை அழைத்து சிறப்பு கூட்டம் நடத்தினோம். காற்றில் மாசு கலக்காத படி மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, புகை போக்கி வாயிலாக வெளியேற்ற உத்தரவு பிறப்பித்தோம். அதை நடைமுறைப்படுத்த மூன்று மாதம் அவகாசம் வழங்கியுள்ளோம். அதை மீறும்பட்சத்தில், சம்பந்தப்பட்ட தொழிற்சாலை மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, தெரிவித்தார்.