/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/மீஞ்சூர் விவசாயிகள் கவலை 30 மூட்டை நெல்லுக்கு 10 மூட்டையே அறுவடைமீஞ்சூர் விவசாயிகள் கவலை 30 மூட்டை நெல்லுக்கு 10 மூட்டையே அறுவடை
மீஞ்சூர் விவசாயிகள் கவலை 30 மூட்டை நெல்லுக்கு 10 மூட்டையே அறுவடை
மீஞ்சூர் விவசாயிகள் கவலை 30 மூட்டை நெல்லுக்கு 10 மூட்டையே அறுவடை
மீஞ்சூர் விவசாயிகள் கவலை 30 மூட்டை நெல்லுக்கு 10 மூட்டையே அறுவடை
ADDED : ஜன 27, 2024 11:31 PM
பொன்னேரி, சம்பா பருவத்திற்கு பயிரிடப்பட்டு, வறட்டி, பூச்சி தாக்குதல், புயல், மழை ஆகியவற்றால் பெரும் பாதிப்படைந்து, தற்போது ஏக்கருக்கு, 30 மூட்டை மகசூலுக்கு பதில், 10 மூட்டைக்கும் குறைவாக கிடைத்திருப்பதால் விவசாயிகள் வேதனை அடைந்து உள்ளதுடன், அரசின் உதவியை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் வேளாண் வட்டாரத்தில், சம்பா பருவத்திற்கு, 33,000 ஏக்கர் பரப்பில் நெல் பயிரிடப்பட்டிருந்தது. கடந்த, செப்டம்பரில் நேரடி நெல் விதைப்பு, நாற்றாங்கால் நடவு, இயந்திர நடவு என, விவசாய பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
அக்டோபர் துவக்கத்தில் எதிர்பார்க்கப்பட்ட மழை, ஒரு மாதத்திற்கு பின், நவம்பரில் பொழிந்தது.
பருவகாலத்தில் மழை இல்லாமல் நெற்பயிர்கள் வறட்சியால் பாதித்தன. அதை தொடர்ந்து, நவம்பரில் அவ்வப்போது பெய்த மழையால் பயிர்கள் புத்துணர்ச்சி பெற்ற நிலையில், பூச்சி தாக்குதல் ஏற்பட்டது.
வழக்கமாக ஒரு முறை பூச்சிகொல்லி மருந்துகளை தெளிக்கும் விவசாயிகள், இம்முறை மூன்று முறை மருந்தினங்களை தெளித்து அதிலிருந்து விடுபட்டனர். நெற்பயிர்கள் துார்களுடன் வளர துவங்கிய நிலையில், டிசம்பரில் வீசிய 'மிக்ஜாம்' புயல் மழை விவசாயிகளை கவலை அடைய செய்தது. விளைநிலங்கள் மழைநீரில் மூழ்கி 10 நாட்களுக்கு பின் வடிந்தது.
பால்பிடிக்கும் பருவத்தில் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி கிடந்ததால், நெல்மணிகள் வளர்ச்சியின்றி பதராகி மாறின.
இந்நிலையில் பல்வேறு தடைகளை கடந்து வளர்ந்த நெற்பயிர்களை தற்போது விவசாயிகள் அறுவடை செய்து வருகின்றனர். ஆனால் எதிர்பார்த்த மகசூல் இல்லாததை கண்டு அவர்கள் வேதனை அடைந்து உள்ளனர்.
வழக்கமாக ஏக்கருக்கு, 28 - 32 மூட்டைகள் கிடைக்கும் நிலையில், தற்போது, 8 - 10 மூட்டைகளே கிடைக்கின்றன. இதனால் ஏற்பட்டுள்ள வருவாய் இழப்பை எண்ணி விவசாயிகள் வேதனை அடைந்து உள்ளனர்.
மேலும், ஒரு சில கிராமங்களில், இம்மாதம், 8ம் தேதி பெய்த திடீர் மழையால் விளைநிலங்களில் மழைநீர் தேங்கின.
தண்ணீர் வெளியேற வழியில்லாத நிலையில், தலைசாய்ந்த நெற்பயிர்கள் தற்போது முளைத்து விட்டன. அதுபோன்ற விளைநிலங்களில் விவசாயிகள் அறுவடை பணிகளை செய்வதை தவிர்த்து உள்ளனர்.
பல்வேறு சிரமங்களுடன் விவசாயம் செய்வது பெரும் போராட்டமாக இருப்பதால், தமிழக அரசின் உதவியை எதிர்பார்த்தும் விவசாயிகள் காத்திருக்கின்றனர்.
இது குறித்து இலுப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த விவசாயி ஆர்.தனசேகர் தெரிவித்ததாவது:
விளைநிலங்களில் தேங்கும் மழைநீரை வெளியேற்ற சரியான வடிகால்வாய்கள் இல்லை. இருக்கும் கால்வாயையும் முறையாக பராமரிக்கப்படுவதில்லை. நீர்நிலைகளுக்கு செல்லும் வடிகால்வாய்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன.
இந்த ஆண்டு வறட்சி, பூச்சி தாக்குதல், புயல், மழை என பல்வேறு தடைகளை கடந்து, நெற்பயிர்கள் வளர்ந்தன. தற்போது அவற்றை அறுவடை செய்யும்போது ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. நெல் மணிகளை விட, பதர்களே அதிகமாக உள்ளன.
உழவு, நடவு, மருந்தினங்கள், அறுவடை ஆகியவற்றை கணக்கிட்டால் பெரும் நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. இந்த ஆண்டு விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலும் கேள்விக்குறியாகி உள்ளது.
அரசு அறிவித்த புயல் நிவாரணமும் இதுவரை கிடைக்கவில்லை. விவசாயிகள் தொடர்ந்து விவசாயம் செய்வதற்கு ஏதுவாக பயிர் காப்பீடு செய்தவர்களுக்கு முழு இழப்பீடு வழங்க வேண்டும். பயிர் கடன் தள்ளுபடி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.