Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/பெரும்பேடு ஏரி, கால்வாய் துார்வாரி 50 ஆண்டுகளாச்சு...அவலம்: 500 ஏக்கரில் நெற்பயிர் பாழாவதால் விவசாயிகள் விரக்தி

பெரும்பேடு ஏரி, கால்வாய் துார்வாரி 50 ஆண்டுகளாச்சு...அவலம்: 500 ஏக்கரில் நெற்பயிர் பாழாவதால் விவசாயிகள் விரக்தி

பெரும்பேடு ஏரி, கால்வாய் துார்வாரி 50 ஆண்டுகளாச்சு...அவலம்: 500 ஏக்கரில் நெற்பயிர் பாழாவதால் விவசாயிகள் விரக்தி

பெரும்பேடு ஏரி, கால்வாய் துார்வாரி 50 ஆண்டுகளாச்சு...அவலம்: 500 ஏக்கரில் நெற்பயிர் பாழாவதால் விவசாயிகள் விரக்தி

ADDED : ஜூன் 12, 2025 03:04 AM


Google News
Latest Tamil News
பொன்னேரி, பொன்னேரி தாலுகா பெரும்பேடு ஏரி மற்றும் 6 கிராமங்களின் வடிகால்வாய்களை 50 ஆண்டுகளாக துார்வாரி சீரமைக்காததால், விவசாயிகளின் 500 ஏக்கர் பரப்பிலான நெற்பயிர்கள் ஆண்டுதோறும் பாழாவதாகவும், வருவாய் இழப்பு ஏற்படுவதாகவும் விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். ஏரி,கால்வாய்களை துார்வார அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகளிடம் கோரிக்கை எழுந்துள்ளது.

பொன்னேரி அடுத்த அரவாக்கம், மத்ராவேடு, மடிமைகண்டிகை, வீரங்கிமேடு, ஏருசிவன், ஆசானபூதுார் ஆகிய கிராமங்களில் சொர்ணவாரி, சம்பா பருவங்களில், 3,000 ஏக்கர் பரப்பில் நெல் பயிரிடப்படுகிறது.

மேற்கண்ட கிராமங்களின் விவசாய நிலங்களில் தேங்கும் மழைநீர் வெளியேற்றுவதற்காக இரண்டு கி.மீ., தொலைவிற்கு வடிகால்வாய் உள்ளது.

மழைக்காலங்களின்போது, விளைநிலங்களில் தேங்கும் அதிகப்படியான மழைநீரை, விவசாயிகள் வடிகால்வாய் வழியாக எளிதாக வெளியேற்றி நெற்பயிர்களை பாதுகாப்பர்.

இந்நிலையில், வடிகால்வாய் முழுதும் முள்செடிகள் வளர்ந்தும், மண் துார்ந்தும் பராமரிப்பு இன்றி கிடக்கிறது. ஒரு சில இடங்களில் கரைகள் இல்லாமல் விவசாய நிலங்களாக உள்ளன.

இதனால் விவசாய நிலங்களில் தேங்கும் மழைநீர் வடிகால்வாய் வழியாக வெளியேற்ற முடியாத நிலை ஏற்படுகிறது.

மேலும், கால்வாய்க்கு கிழக்கு பகுதியில், பெரும்பேடு ஏரி அமைந்து உள்ளது. இந்த ஏரியும் பல ஆண்டுகளாக துார்வாரப்படாமலும், அதன் கரை சீரமைக்கப்படாமலும் இருக்கிறது.

தற்போது பெரும்பேடு ஏரியின் தரைப்பகுதியும், மேற்கண்ட கிராமங்களின் விவசாய நிலங்களின் தரைப்பகுதியும் சம அளவில் இருக்கிறது.

ஏரி நிரம்பும்போது, கரைகள் இல்லாத பகுதி வழியாக மழைநீர் வெளியேறி, மேற்கண்ட கிராமங்களின் விவசாய நிலங்களை மூழ்கடிக்கிறது.

கால்வாயும் துார்வாரப்படாத நிலையில், ஏரி தண்ணீரும் விவசாய நிலங்களுக்குள் வருவதால், மேற்கண்ட கிராமங்களில் ஒவ்வொரு ஆண்டும், 500 ஏக்கர் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி பாழாகிறது.

மழைநீரில் மூழ்கி கிடக்கும் நெற்பயிர்களை பார்வையிட வரும் வருவாய்,வேளாண் மற்றும் நீர்வளத்துதுறை அதிகாரிகள் கால்வாயை துார்வாரி தருவதாகவும், ஏரியின் கரைகளை சீரமைப்பதாகவும் விவசாயிகளுக்கு ஆறுதல் கூறி செல்கின்றனர்.

அதன்பின் அது தொடர்பாக எந்தவொரு நடவடிக்கையும் எடுப்பதில்லை. விவசாயிகள் தொடர்ந்து அதிகாரிகளிடம் முறையிடுவதும், அவர்கள் அலட்சியத்தால், விவசாயம் பாதிப்பதும் தொடர்கிறது.

அரசின் நடவடிக்கைக்காக, 50 ஆண்டுகளாக காத்திருக்கும் நிலையில், அவர்கள் விரக்தி அடைந்து, விவசாயத்தை கைவிடும் நிலைக்கு ஆளாகி உள்ளனர்.

எப்போதுதான் தீர்வு

நீர்வளத்துறையிடம் ஒவ்வொரு முறை கேட்கும்போது, கால்வாயை துார்வாரவும், பெரும்பேடு ஏரியின் கரையை சீரமைக்கவும், விரிவான திட்ட அறிக்கை தயாரித்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று உள்ளதாகவும், நிதி ஒதுக்கீடு கிடைத்தவுடன் பணிகளை துவக்குவோம் என தெரிவிக்கின்றனர்.

ஆனால் அதற்கான எந்த பணிகளும் நடைபெறவில்லை. கடந்த, 1975ல் இருந்து இந்த பிரச்னை உள்ளது. 50 ஆண்டு கால பிரச்னைக்கு எப்போதுதான் தீர்வு கிடைக்கும் என தெரியவில்லை. தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளோம்.

- முத்து, விவசாயி, மடிமைகண்டிகை.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us