Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/இலவச பாஸ் இருந்தும் மாணவ- மாணவியர்...தவிப்பு : ஒரேயொரு அரசு பஸ் இயங்குவதால் அவதி

இலவச பாஸ் இருந்தும் மாணவ- மாணவியர்...தவிப்பு : ஒரேயொரு அரசு பஸ் இயங்குவதால் அவதி

இலவச பாஸ் இருந்தும் மாணவ- மாணவியர்...தவிப்பு : ஒரேயொரு அரசு பஸ் இயங்குவதால் அவதி

இலவச பாஸ் இருந்தும் மாணவ- மாணவியர்...தவிப்பு : ஒரேயொரு அரசு பஸ் இயங்குவதால் அவதி

UPDATED : ஜூன் 13, 2025 03:12 AMADDED : ஜூன் 13, 2025 02:50 AM


Google News
Latest Tamil News
கடம்பத்துார்: திருவள்ளூரில் இருந்து கடம்பத்துார், பேரம்பாக்கம், மப்பேடு, கீழச்சேரி, பண்ணுார், சுங்குவார்சத்திரம் வழியாக இயக்கப்படும் அரசு பேருந்துகள் குறைவாக உள்ளதால், உரிய நேரத்தில் மாணவ- மாணவியர் பள்ளிக்கு செல்ல முடியாமல், இலவச பஸ் பாஸ் இருந்தும் ஆட்டோவில் செல்லும் நிலை உள்ளது. இத்தடத்தில் கூடுதல் பஸ் இயக்க வேண்டுமென, மாணவ, மாணவியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.தவிப்பு

திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்துார் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த 250க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கீழச்சேரி, பண்ணுார் ஆகிய பகுதியில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து வருகின்றனர்.

கடம்பத்துார் பகுதியிலிருந்து பேரம்பாக்கம், கொண்டஞ்சேரி, மப்பேடு, கீழச்சேரி, பண்ணுார் வழியாக சுங்குவார்சத்திரம் பகுதிக்கு தடம் எண் 162 என்ற விழுப்புர கோட்ட அரசு பேருந்து இயக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் தற்போது இந்த பேருந்து 14பி என்று தடம் எண்ணாக மாற்றப்பட்டு காலை 8:15 மணிக்கு கடம்பத்துாரிலிருந்து இயக்கப்பட்டு வந்தது.

இந்த பேருந்தை நம்பி பேரம்பாக்கம், சத்தரை, கொண்டஞ்சேரி, மப்பேடு உள்ளிட்ட 20 கிராமங்களுக்கும் மேற்பட்ட பகுதிகளைச் சேர்ந்த 250க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கீழச்சேரி, பண்ணுார் அரசு பள்ளியில் படித்து வருகின்றனர்.

இந்த பேருந்து தற்போது காலை 8:30 மற்றும் 8:45 என்ற மணிக்கு மட்டும் செல்கிறது. அதுவும் உரிய நேரத்திற்கு வராமல் ஓட்டுநர்கள் தங்கள் இஷ்டம் போல் இயக்கி வருவதால் பள்ளி துவக்க நேரமான காலை 9:00 மணிக்கு பள்ளிக்கு செல்ல முடியாமல் மாணவ - மாணவியர் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். இலவச பஸ் பாஸ் இருந்தும் ேஷர் ஆட்டோக்களில் மாணவ, மாணவியர் செல்கின்றனர்.

திருவள்ளூரிலிருந்து கடம்பத்துார், பேரம்பாக்கம், மப்பேடு, சுங்குவார்சத்திரம் வழியாக காஞ்சிபுரத்திற்கு இயக்கப்பட்ட தடம் எண் 160 என்ற அரசு பேருந்து தற்போது முற்றிலும் நிறுத்தப்பட்டது.

எனவே, மாவட்ட நிர்வாகம் கடம்பத்துார் - சுங்குவார்சத்திரம் வழித்தடத்தில் அரசு பேருந்தை முறையாக இயக்கவும் இப்பகுதியில் கூடுதல் அரசு பேருந்துகளை இயக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாணவ, மாணவியர் மற்றும் பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழக அரசு அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கியுள்ளது. ஆனால் பேருந்துகள் சரியான முறையில் இயக்கப்படாததால் நாங்கள் கடும் அவதிப்பட்டு வருகிறோம். இலவச பஸ் பாஸ் இருந்தும் ேஷர் ஆட்டோக்களில் காசு கொடுத்து பயணம் மேற்கொள்கிறோம், என, அரசு பள்ளி, மாணவ,மாணவியர் புலம்புகின்றனர்.

இதுகுறித்து விழுப்புர கோட்ட அரசு பேருந்து திருவள்ளூர் அதிகாரி ஒருவர் கூறுகையில், 'கடம்பத்துாரிலிருந்து இயக்கப்படும் தடம் எண் 14பி என்ற அரசு பேருந்து குறித்து நேரில் சென்று ஆய்வு செய்து காலை 8:15 மணிக்கு இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இதேபோல் மாலை நேரத்திலும் முறையாக இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றார்.

17 ஆண்டுகளாக பராமரிக்காத அவலம்


கடம்பத்துார் ஒன்றியம் பேரம்பாக்கம் பேருந்து நிலையத்தை பேரம்பாக்கம் மற்றும் சுற்றியுள்ள இருளஞ்சேரி, கூவம், குமாரச்சேரி, நரசிங்கபுரம், என 20க்கும் மேற்பட்ட கிராமவாசிகள் பயன்படுத்தி வருகின்றனர் இங்கு கடந்த 2007--- 08-ம் ஆண்டு பேருந்து நிலையம் கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு வந்தது. கட்டி முடிக்கப்பட்டு 17 ஆண்டுகளாகியும் இன்று வரை எவ்வித பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளாததால் அடிப்படை வசதிகளான இருக்கை, குடிநீர், போன்ற எவ்வித வசதிகளும் இல்லாமல் பயணியர் அவதிப்பட்டு வருகின்றனர்.
பேருந்து நிலையத்திற்கு சுற்றுசுவர் இல்லாததால் மாலை நேரங்களில் குடி மையமாக மாறி விடுவதால் பயணியர் முகம் சுழிக்கும் நிலை ஏற்படுகிறது. பேருந்து நிலையத்திற்கு வரும் சாலை கற்கள் பெயர்ந்து மோசமான நிலையில் உள்ளதால் பேருந்துகளை நிலையத்திற்கு கொண்டு வராமல் ஓட்டுநர்கள் சாலையிலேயே நிறுத்தி பயணியரை ஏற்றி, இறக்கி செல்கின்றனர்.எனவே, மாவட்ட நிர்வாகம் பேரம்பாக்கத்தில் பேருந்து நிலையத்தை ஆய்வு செய்து அடிப்படை வசதிகளை நிறைவேற்றவும், பேருந்து நிலையத்திற்கு வரும் சாலையை சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பயணியர் மற்றும் பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us