/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/வணிக வளாகம், வீடுகளில் மின்மோட்டார் வைத்து... குடிநீர் திருட்டு: அலட்சிய அதிகாரிகளால் தினமும் அல்லல்படும் மக்கள்வணிக வளாகம், வீடுகளில் மின்மோட்டார் வைத்து... குடிநீர் திருட்டு: அலட்சிய அதிகாரிகளால் தினமும் அல்லல்படும் மக்கள்
வணிக வளாகம், வீடுகளில் மின்மோட்டார் வைத்து... குடிநீர் திருட்டு: அலட்சிய அதிகாரிகளால் தினமும் அல்லல்படும் மக்கள்
வணிக வளாகம், வீடுகளில் மின்மோட்டார் வைத்து... குடிநீர் திருட்டு: அலட்சிய அதிகாரிகளால் தினமும் அல்லல்படும் மக்கள்
வணிக வளாகம், வீடுகளில் மின்மோட்டார் வைத்து... குடிநீர் திருட்டு: அலட்சிய அதிகாரிகளால் தினமும் அல்லல்படும் மக்கள்
ADDED : செப் 11, 2025 10:34 PM

திருவாலங்காடு:ஊராட்சி மற்றும் நகரங்களில் உள்ள வீடுகள், வணிக வளாகங்களில் உள்ளாட்சி அமைப்பு மூலம் வினியோகிக்கப்படும் குடிநீரை, மின்மோட்டார் வைத்து திருடுவது அதிகரித்துள்ளது. இதனால், மேடான பகுதி மற்றும் தொலைவில் வசிக்கும் குடியிருப்பு மக்கள் குடிநீரின்றி சிரமப்படுகின்றனர். இதுகுறித்து பலமுறை புகார் தெரிவித்தும், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக உள்ளதாக, அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் திருவாலங்காடு, ஆர்.கே.பேட்டை, கும்மிடிப்பூண்டி உட்பட 14 ஒன்றியங்களில், 525 ஊராட்சிகள் மற்றும் திருவள்ளூர், பூந்தமல்லி, திருவேற்காடு, திருநின்றவூர், திருத்தணி, பொன்னேரி ஆகிய நகராட்சிகளும், ஆவடி மாநகராட்சியும், எட்டு பேரூராட்சிகளும் உள்ளன.
இங்கு, உள்ளாட்சி நிர்வாகங்கள் மூலம், 2,250க்கும் மேற்பட்ட குடிநீர் தொட்டிகள் கட்டப்பட்டு, 30.50 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கும், 35,000க்கும் மேற்பட்ட கடைகள், வணிக வளாகங்களுக்கும் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.
அதேபோல், அத்திப்பட்டு கூட்டு குடிநீர் திட்டம், அனுப்பம்பட்டு கூட்டு குடிநீர் திட்டம், மீஞ்சூர் பகுதிக்கு காட்டுப்பள்ளியில் உள்ள கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் மூலமாக குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
மேலும், பூண்டி, புழல், தேர்வாய்கண்டிகை ஆரணியாறு, கொசஸ்தலையாறு மற்றும் முக்கிய ஏரிகள் மூலமாகவும் தண்ணீர் சுத்திகரிப்பு செய்து வினியோகம் செய்யப்படுகிறது. ஆனாலும், மாவட்டத்தின் பல்வேறு ஊர்களில் குடிநீர் தட்டுப்பாடு உள்ளது. மக்கள் குடிநீருக்காக குடத்துடன் அலையும் நிலையும் உள்ளது.
குடிநீர் வினியோகம் செய்யும்போது திருத்தணி, திருவள்ளூர் உள்ளிட்ட நகராட்சிகளிலும், திருவாலங்காடு, கடம்பத்துா ர் உள்ளிட்ட ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு ஊராட்சி பகுதிகளிலும், மின் மோட்டார் வைத்து குடிநீரை திருடுகின்றனர்.
இதனால், மின் மோட்டார் பயன்படுத்தாத வீடுகளில் குடிநீர் வருவது குறைந்துள்ளது. சில வீடுகளில் வருவதே இல்லை. மேலும், மேடான பகுதிகளில் ஒரு துளி கூட குடிநீர் வருவதே இல்லை. இப்பிரச்னை பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது.
'குடிநீர் பிடிக்க மின் மோட்டாரை பயன்படுத்த கூடாது' என, உள்ளாட்சி நிர்வாகத்தினர் அவ்வப்போது அறிவித்துள்ளனர். சில நேரங்களில் மின் மோட்டாரை பறிமுதல் செய்துள்ளனர். ஆனாலும், குடிநீர் திருடுவது தொடர்கிறது.
திருவாலங்காடின் சின்னம்மாபேட்டை, கனகம்மாசத்திரம், ஆற்காடுகுப்பம், பூனிமாங்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீடுகள் மற்றும் வணிக பயன்பாட்டிற்கு குடிநீர் இணைப்பு பெற்றவர்கள் மின்மோட்டார் மூலம் குடிநீர் திருடுகின்றனர்.
இதனால், மேடான பகுதிகளுக்கு குடிநீர் வருவதில்லை. மின் மோட்டாரை பயன்படுத்தி குடிநீர் திருடுவது நகர் பகுதிகளில் மட்டுமல்லாமல், தற்போது கிராம பகுதிகளிலும் அதிகரித்து வருகிறது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.