Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ திருநின்றவூரில் வெடித்த வடிகால்வாய் பிரச்னை தி.மு.க., - அ.தி.மு.க., நிர்வாகிகள் கைகலப்பு

திருநின்றவூரில் வெடித்த வடிகால்வாய் பிரச்னை தி.மு.க., - அ.தி.மு.க., நிர்வாகிகள் கைகலப்பு

திருநின்றவூரில் வெடித்த வடிகால்வாய் பிரச்னை தி.மு.க., - அ.தி.மு.க., நிர்வாகிகள் கைகலப்பு

திருநின்றவூரில் வெடித்த வடிகால்வாய் பிரச்னை தி.மு.க., - அ.தி.மு.க., நிர்வாகிகள் கைகலப்பு

ADDED : செப் 21, 2025 11:01 PM


Google News
திருநின்றவூர்:திருநின்றவூர் நகராட்சி, 21 மற்றும் 27வது வார்டிற்கு உட்பட்ட பகுதியில் அன்னை இந்திரா நகர் வருகிறது. இதில் 16 பிரதான சாலை மற்றும் 30 குறுக்கு தெருக்களில் 2,500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.

இங்கு, கடந்த 30 ஆண்டுகளாக முறையான மழைநீர் வடிகால்வாய் வசதி இல்லை. இதனால், திருநின்றவூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து வெளியேறும் மழை வெள்ளம், அன்னை இந்திரா நகர் பகுதியில் தேங்கி, வெள்ள பாதிப்பை ஏற்படுத்துகிறது.

துார்வாரும் பணி சமீபமாக பெய்து வரும் மழையில், கடந்த 21 மற்றும் 27வது வார்டிற்கு உட்பட்ட ஸ்ரீனிவாசா நகர், ஸ்ரீனிவாசா நகர் - விரிவு, ஹிம்மத் நகர், எல்.ஐ.சி., நகர், அன்னை இந்திரா நகர் அனெக்ஸ், மகாலட்சுமி நகர், திருவேங்கட நகர், பத்மாவதி நகர் உள்ளிட்ட பகுதிகளில் 1,000க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் தேங்கியது.

இதனால், அப்பகுதியில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

நேற்று முன்தினம் இரவு 27வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் ஜெயகுமார் என்பவர், அன்னை இந்திரா நகர் அனெக்ஸ் பகுதியில் உள்ள மழைநீர் கால்வாயை 'பொக்லைன்' இயந்திரம் மூலம் துார்வாரும் பணியில் ஈடுபட்டு இருந்தார்.

அப்போது, அங்கு வந்த 21வது வார்டு அ.தி.மு.க., கவுன்சிலர் அனிதா மற்றும் கட்சியினர், 'வடிகால் துார் வாருவதால், நீர் வரத்து அதிகரித்து, எங்கள் வார்டில் உள்ள குடியிருப்பு பகுதியில், வெள்ள பாதிப்பு அதிகரிக்கும் எனக்கூறி, பணியை நிறுத்தும்படி கேட்டுள்ளனர்.

இது தொடர்பாக, இருதரப்பிலும் தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது.

இதில், கவுன்சிலர் அனிதாவின் கணவர் அழகேசன் மற்றும் இந்திரா நகரைச் சேர்ந்த சச்சின், 26, என்பவரிடையே அடிதடி ஏற்பட்டுள்ளது.

மேலும், தள்ளுமுள்ளுவில் அதே பகுதியைச் சேர்ந்த அற்புதராஜ் என்பவரின் சட்டையை, அழகேசன் கிழித்ததாக கூறப்படுகிறது.திருநின்றவூர் போலீசார், இருதரப்பையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், சச்சின், கவுன்சிலர் அனிதா, அழகேசன் ஆகியோர், தகராறில் காயமடைந்ததாக கூறி, திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர்.

நீதிமன்ற உத்தரவு மீறல்? இதுகுறித்து, அ.தி.மு.க., கவுன்சிலர்கள் தரப்பில் தெரிவித்ததாவது:

மழைநீர் வடிகால் தோண்டக் கூடாது என கூறி, ஏற்கனவே நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம்.

நகராட்சி நிர்வாகம், அன்னை இந்திரா நகர் அனெக்ஸ் பகுதியில் மணல் மூட்டைகள் வைத்து அடைத்து வைத்திருந்தது. இந்நிலையில், நீதிமன்ற உத்தரவை மீறி, நேற்று முன்தினம், வடிகால் அடைப்பை உடைத்துள்ளனர். இதனால், அன்னை இந்திரா நகருக்கு வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கவுன்சிலர் அனிதா, இதை தட்டி கேட்டபோது, தி.மு.க.,வைச் சேர்ந்த தலைமை கழக பேச்சாளர் தங்கமணி, அவரது மகன் செந்தில், மகள் சுஜாதா, அவரது பேரன் சச்சின் ஆகியோர் சேர்ந்து, அவரை தாக்கியுள்ளனர். தடுக்க சென்ற அவரது கணவரும் தாக்கப்பட்டார்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து, மருத்துவமனையில் பெறப்பட்ட புகாரை அடுத்து, திருநின்றவூர் போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us