Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ அனுமதித்தது 3; எடுத்தது 15 அடி: தடப்பெரும்பாக்கம் பாசன ஏரியில் கனிமவளம் கபளீகரம்3 ஆண்டுகளாக தொடர்வதால் நீதிமன்றத்தை நாட முடிவு

அனுமதித்தது 3; எடுத்தது 15 அடி: தடப்பெரும்பாக்கம் பாசன ஏரியில் கனிமவளம் கபளீகரம்3 ஆண்டுகளாக தொடர்வதால் நீதிமன்றத்தை நாட முடிவு

அனுமதித்தது 3; எடுத்தது 15 அடி: தடப்பெரும்பாக்கம் பாசன ஏரியில் கனிமவளம் கபளீகரம்3 ஆண்டுகளாக தொடர்வதால் நீதிமன்றத்தை நாட முடிவு

அனுமதித்தது 3; எடுத்தது 15 அடி: தடப்பெரும்பாக்கம் பாசன ஏரியில் கனிமவளம் கபளீகரம்3 ஆண்டுகளாக தொடர்வதால் நீதிமன்றத்தை நாட முடிவு

ADDED : ஜூன் 19, 2025 02:16 AM


Google News
Latest Tamil News
பொன்னேரி:சென்னை எல்லை சாலை திட்ட பணிகள் மற்றும் தனியார் தேவைகளுக்காக, தடப்பெரும்பாக்கம் பாசன ஏரியில் இருந்து, மூன்று ஆண்டுகளாக 10 - 15 அடி ஆழத்தில் மண் அள்ளப்பட்டு, கனிமவளம் கபளீகரம் செய்யப்படுவது, கிராம மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. அதிகாரிகளிடம் முறையிட்டும் பயனில்லாததால், நீதிமன்றத்தை நாட முடிவு செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த தடப்பெரும்பாக்கம் கிராமத்தில், நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டில், 160 ஏக்கர் பரப்பளவில் பாசன ஏரி அமைந்துள்ளது.

இந்த ஏரியில் சேமித்து வைக்கப்படும் மழைநீர், ஆமூர், சிங்கிலிமேடு, கிருஷ்ணாபுரம், கொடூர், வடக்குப்பட்டு, தடப்பெரும்பாக்கம் ஆகிய கிராமங்களின் விவசாய தேவைக்கு பயன்படுகிறது.

ஏரியில் மழைநீர் தேங்குவதால் நிலத்தடி நீர் பாதுகாக்கப்படுகிறது. ஏரியின் பல்வேறு பகுதிகளில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து, குடியிருப்புகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

இந்நிலையில், மீஞ்சூர் அடுத்த காட்டுப்பள்ளியில் துவங்கி மாமல்லபுரம் வரை, 132 கி.மீ., தொலைவிற்கு, சென்னை எல்லை சாலை திட்டத்திற்காக, தடப்பெரும்பாக்கம் ஏரியில் இருந்து, மூன்று ஆண்டுகளாக மண் அள்ளப்பட்டு வருகிறது.

இதற்காக, மழைக்காலங்களில் ஏரியில் தேங்கும் மழைநீரும் வெளியேற்றி வீணாக்கப்படுகிறது. குவாரிக்காக ஏரியில், மூன்று ஆண்டுகளாக மழைநீர் சரிவர தேக்கி வைக்கப்படாமல் உள்ளது.

இந்த ஆண்டும் குவாரி ஏலம் விடப்பட்டு, கடந்த ஏப்ரல் மாதம் துவங்கி, தற்போது வரை, தினமும் நுாற்றுக்கணக்கான லாரிகளில் மண் அள்ளப்பட்டு வருகிறது. இடையில் ஆளுங்கட்சி பிரமுகர்களும் தனி குவாரி எடுத்து, பல லட்சம் ரூபாய் கல்லா கட்டினர்.

குவாரிகளில், 3 அடி ஆழத்திற்கு மட்டுமே மண் அள்ள அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு, 10 - 15 அடி வரை அள்ளப்படுகிறது. களிமண் மட்டுமின்றி சவுடு மற்றும் மணல் உள்ளிட்டவையும் தொடர்ச்சியாக அள்ளப்பட்டு வருகிறது.

அதிக ஆழத்தில் மணலுடன் சேர்த்து மண் அள்ளப்படுவதால், நிலத்தடி நீர் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.

குவாரி என்ற பெயரில் ஏரி கபளீகரம் செய்யப்பட்டு வருவது, கிராம மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும், தற்போது வரை நடவடிக்கை எடுக்கவில்லை. அடுத்தக்கட்டமாக குவாரியை தடுக்க தீவிர போராட்டங்கள் மற்றும் நீதிமன்றத்தை நாட கிராம மக்கள் தயாராகி வருகின்றனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:

அதிகாலை முதல் இரவு வரை, தொடர்ந்து ஏரியில் மண் அள்ளப்படுகிறது. குவாரி என்ற பெயரில், 15 அடி ஆழம் வரை மணல், சவுடு மண் என, அனைத்தையும் கபளீகரம் செய்கின்றனர்.

தனிநபர்கள் சிலரின் சுயலாபத்திற்காக, கனிமவளம் கொள்ளை போகிறது. இதனால், எதிர்காலத்தில் ஏரியை சுற்றியுள்ள கிராமங்களில் நிலத்தடி நீர் நிச்சயம் கேள்விக்குறி தான்.

காலை - மாலை நேரங்களில் லாரிகளால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. புழுதி பறப்பதால், குடியிருப்புவாசிகளின் சுகாதாரம் பாதிக்கிறது. இரவு நேரங்களில் டிராக்டர்களில் மணல் அள்ளப்படுகிறது. உள்ளூர் போலீசாருக்கு 'கவனிப்பு' இருப்பதால் அவர்கள் கண்டுகொள்வதில்லை.

தற்போது ஆளுங்கட்சி சார்பில், மற்றொரு குவாரிக்கு அனுமதி பெற திட்டமிட்டு உள்ளனர். தற்போது செயல்படும் குவாரியை உடனடியாக நிறுத்த வேண்டும். புதிதாக எந்த குவாரிக்கும் அனுமதி வழங்க கூடாது. குவாரி தொடர்ந்தால், போராட்டங்களை முன்னெடுப்போம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிக ஆழத்தில் தடப்பெரும்பாக்கம் ஏரியில் மண் அள்ளப்பட்டு உள்ளது. இடம்: பொன்னேரி.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us