Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ போதை ஓட்டுநர், நடத்துநர்கள் தப்பமுடியாது டிப்போக்களில் தினமும் 'ஆல்ஹகால்' பரிசோதனை

போதை ஓட்டுநர், நடத்துநர்கள் தப்பமுடியாது டிப்போக்களில் தினமும் 'ஆல்ஹகால்' பரிசோதனை

போதை ஓட்டுநர், நடத்துநர்கள் தப்பமுடியாது டிப்போக்களில் தினமும் 'ஆல்ஹகால்' பரிசோதனை

போதை ஓட்டுநர், நடத்துநர்கள் தப்பமுடியாது டிப்போக்களில் தினமும் 'ஆல்ஹகால்' பரிசோதனை

ADDED : செப் 14, 2025 11:33 PM


Google News
Latest Tamil News
திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில் அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர்கள், பணிக்கு வரும் போது போதையில் உள்ளனரா என்பதை கண்டறிய, தினமும் 'ஆல்ஹகால்' பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதற்காக, மாவட்டத்தில் உள்ள ஐந்து டிப்போக்களில் அதற்கான கருவிகள் அளிக்கப்பட்டுள்ளன.

அரசு போக்குவரத்து கழகத்தின் விழுப்புரம் கோட்டத்திற்கு உட்பட்ட திருவள்ளூர் மண்டலத்தில், ஐந்து போக்குவரத்து பணிமனைகள் இயங்கி வருகின்றன. இதில், திருவள்ளூர் பணிமனையில் 20 நகர பேருந்து, 35 விரைவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

செங்கல்பட்டு திருத்தணியில் 30 நகர மற்றும் 39 விரைவு பேருந்துகளும், ஊத்துக்கோட்டையில் 35 விரைவு பேருந்துகளும், பொன்னேரியில் 22 நகர மற்றும் 22 விரைவு பேருந்து, கோயம்பேடு பணிமனையில் 26 விரைவு பேருந்து என, மொத்தம் 229 அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

மாவட்டத்தில் உள்ள கிராம பகுதிகளுக்கும், சென்னை, செங்கல்பட்டு, ஓசூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இதற்காக, திருவள்ளூர் மண்டலத்தில், 462 ஓட்டுநர், 508 நடத்துநர் என, மொத்தம் 970 பேர் பணிபுரிந்து வருகின்றனர். போக்குவரத்து வசதியில்லா பகுதி அதிகம் இருப்பதால், இயக்கப்படும் அரசு பேருந்துகளில் பயணியர் கூட்டம் அதிகளவில் உள்ளது.

புகார் குறிப்பாக, காலை - மாலை நேரத்தில் பணிக்கு செல்வோர், பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியர், பெண்கள் என, ஏராமானோர் அரசு பேருந்துகளையே நம்பியுள்ளனர்.

இந்நிலையில், அரசு பேருந்துகளில் உள்ள ஓட்டுநர் மற்றும் நடத்துநர் சிலர், பணியின்போது மது அருந்தி பேருந்துகளை இயக்கி வருகின்றனர். இதுதொடர்பாக, போக்குவரத்து துறைக்கு பயணியரிடம் இருந்து, பல்வேறு புகார் வந்தது. குறிப்பாக, இரவு நேர பணியில் இருப்போர் மீது, பயணியர் குற்றஞ்சாட்டினர்.

இதையடுத்து, தமிழகம் முழுதும், அரசு பேருந்துகளை இயக்கும் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் ஆகியோர், மது அருந்தி பணிக்கு வரக்கூடாது என, எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

எதிர்பார்ப்பு மேலும், அனைத்து போக்குவரத்து பணிமனைகளிலும், பணிக்கு வரும் ஓட்டுநர் மற்றும் நடத்துநர்கள் மது போதையில் உள்ளனரா என்பதை கண்டறிய, 'ஆல்ஹகால்' பரிசோதனை, அதற்கான பிரத்யேக கருவி வாயிலாக மேற்கொள்ளப்படும் என அறிவித்தது.

இதற்காக, மாநிலம் முழுதும் உள்ள போக்குவரத்து கழகங்களுக்கு, ரத்தத்தில் உள்ள ஆல்கஹால் அளவை மதிப்பிடும் கருவி அனுப்பி வைக்கப்பட்டது.

அந்த வகையில், திருவள்ளூர் மண்டலத்தில் உள்ள ஐந்து போக்குவரத்து பணிமனைகளிலும், தற்போது அந்த கருவி வாயிலாக, பணிக்கு வருவோரிடம் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

இதபோல், செங்கை மாவட்டத்தில் நடைமுறைப் படுத்தப்படுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து, திருவள்ளூர் மண்டல அரசு போக்குவரத்து கழக அலுவலர் கூறியதாவது:

திருவள்ளூர், திருத்தணி, ஊத்துக்கோட்டை, பொன்னேரி மற்றும் கோயம்பேடு ஆகிய பணிமனைகளில், பணிக்கு வரும் ஓட்டுநர் மற்றும் நடத்துநரிடம் பரிசோதனை செய்யப்படுகிறது.

இந்த கருவியில், சோதனைக்கு உட்படுத்தப்படும் ஓட்டுநர் பெயர் உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் காகித வடிவில் பெற முடியும். இக்கருவியை பயன்படுத்தி, தினமும் பணிக்கு வரும் ஓட்டுநர், நடத்துநர்களிடம் சோதனை செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது.

மது குடித்திருப்பது தெரியவந்தால், சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த திடீர் சோதனை வாயிலாக, பயணியர் பாதுகாப்பு உறுதி செய்யப்படுவதோடு, மதுவால் ஏற்படும் விபத்து முற்றிலும் தவிர்க்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us