/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ரூ.7 கோடியில் நடக்கும் சாலை விரிவாக்க பணி... வீணானது! துறை அலட்சியத்தால் தொடரும் விபத்துகள்ரூ.7 கோடியில் நடக்கும் சாலை விரிவாக்க பணி... வீணானது! துறை அலட்சியத்தால் தொடரும் விபத்துகள்
ரூ.7 கோடியில் நடக்கும் சாலை விரிவாக்க பணி... வீணானது! துறை அலட்சியத்தால் தொடரும் விபத்துகள்
ரூ.7 கோடியில் நடக்கும் சாலை விரிவாக்க பணி... வீணானது! துறை அலட்சியத்தால் தொடரும் விபத்துகள்
ரூ.7 கோடியில் நடக்கும் சாலை விரிவாக்க பணி... வீணானது! துறை அலட்சியத்தால் தொடரும் விபத்துகள்
ADDED : ஜூன் 17, 2024 03:54 AM

திருத்தணி : திருத்தணி நகரில் நிலவி வரும் தொடர் போக்குவரத்து நெரிசலுக்கு, நெடுஞ்சாலை துறையினர் மற்றும் போலீசார் தீர்வு காணாமல் அலட்சியம் காட்டுவதால் வாகன ஓட்டிகள் விபத்துக்களில் சிக்கி தவிக்கின்றனர். நெடுஞ்சாலை துறையினர், 7 கோடி ரூபாய் மதிப்பில் சாலை விரிவாக்க பணி செய்தும், அரை கிலோ மீட்டர் துாரம் கடக்க ஒரு மணி நேரத்திற்கும் மேலாகிறது.
திருத்தணி நகரில், அறுபடை வீடுகளில் ஒன்றான ஐந்தாம் படை வீடான முருகன் கோவில், ரயில் நிலையம், வட்டார அரசு மருத்துவமனை, வருவாய் கோட்டாட்சியர், தாசில்தார் அலுவலகம், சார்-பதிவாளர், கருவூலகம் போன்ற அனைத்து துறை அரசு அலுவலகங்கள் உள்ளன.
இதனால் திருத்தணி வருவாய் கோட்டத்தில் இருந்து தினசரி, 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பல்வேறு பணிகள் காரணமாக வாகனங்களில் திருத்தணி நகருக்கு வந்து செல்கின்றனர்.
முருகன் கோவில் உள்ளதால் தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து தினமும், குறைந்த பட்சம், 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வாகனங்களில் வந்து மூலவரை தரிசித்து செல்கின்றனர்.
திருப்பதியில் இருந்து திருத்தணி வழியாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, மாமல்லபுரம் போன்ற பகுதிகளுக்கு அரசு மற்றும் தனியார், 100க்கும் மேற்பட்ட பேருந்துகள் செல்கின்றன.
மேற்கண்ட வாகனங்கள் சித்துார் சாலை, ம.பொ.சி.சாலை, அரக்கோணம் சாலை வழியாக முருகன் கோவில் மற்றும் காஞ்சிபுரம் மார்கமாக அதிகளவில் செல்வதால் மேற்கண்ட இடங்களில் போக்குவரத்து நெரிசல் தினமும் ஏற்படுகிறது.
போக்குவரத்து போலீசார் வாகனங்களை முறைப்படுத்தி அனுப்பினாலும் போக்குவரத்து நெரிசல் பிரச்னையை தீர்க்க முடியவில்லை.
இந்நிலையில் சித்துார் சாலை, அரக்கோணம் சாலை மற்றும் ம.பொ.சி.சாலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைக்காரர்கள் நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து வியாபாரம் செய்கின்றனர். குறிப்பாக ம.பொ.சி.சாலை மற்றும் அரக்கோணம் சாலை ஆகிய பகுதிகளில் கடைக்கு வரும் நபர்கள் தங்களது இரு சக்கர வாகனங்களை சாலையில் நிறுத்தி செல்வதால் மேலும் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கிறது.
இந்நிலையில், கடந்தாண்டு திருத்தணி நெடுஞ்சாலை துறையினர், திருத்தணி நகரில் மேற்கண்ட சாலைகளில்ஆக்கிரமிப்பை தடுப்பதற்காக, 7 கோடி ரூபாய் மதிப்பில் சாலை விரிவாக்கம் செய்தது.
ஆனால் தார்ச்சாலை அமைக்காமல் பேவர் பிளாக் சாலை போட்டதால், கடைக்காரர்கள் மீண்டும் ஆக்கிரமித்து வியாபாரம் செய்கின்றனர்.
இது குறித்து திருத்தணி நெடுஞ்சாலைதுறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
திருத்தணி புறவழிச்சாலை பணி கால தாமதம் ஆனதற்கு ரயில்வே நிர்வாகம் தான் காரணம். ரயில்வே மேம்பாலம் அமைப்பதற்கு நாங்கள் கொடுத்த காலக்கெடு ஆகியும் பணி ஆரம்பிக்கவில்லை.
இதனால் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் தான் ரயில்வே மேம்பாலம் அமைத்து எங்களிடம் ஒப்படைத்தனர்.
இதையடுத்து இருபுறமும் ரயில்வே மேம்பாலத்திற்கு இணைப்பு பாலம் கடந்த பத்து நாட்களுக்கு முன் கட்டி முடித்துள்ளோம்.
ஆகையால் இம்மாதம் கடைசி வாரம் அல்லது ஜூலை மாதத்தில் முதல் வாரத்தில் புறவழிச்சாலை பயன்பாட்டிற்கு விடப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
திருத்தணி நகரில் போக்குவரத்து நெரிசல் தவிர்க்க, கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பே, 48 கோடி ரூபாய் மதிப்பில் பட்டாபிராமபுரம் பகுதியில் இருந்து அரக்கோணம் சாலைக்கு புறவழிச்சாலை ஏற்படுத்தும் பணிகள் துவங்கப்பட்டன.
ஆனால் இன்று வரை புறவழிச்சாலை பணிகள் முழுமை அடையாததால் தொடர்ந்து போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. கனரக வாகனங்கள், கார், வேன், லாரி போன்ற வாகனங்கள் திருத்தணி நகருக்கு உள்ளே வராமல் புறவழிச்சாலை பாதையில் அனுப்பினால் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணலாம்.