ADDED : ஜூலை 17, 2024 12:31 AM
அரக்கோணம், சென்னை பெரம்பூர் பகுதியை சேர்ந்த சீனிவாசன் என்பவருக்கு சொந்தமான விவசாய தோட்டம், அரக்கோணம் அடுத்த ஓச்சலம் பகுதியில் உள்ளது.
இங்கு பெரம்பூரை சேர்ந்த சிட்டிபாபு, 60, என்பவர் தோட்டத்தில் தங்கி வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, சிட்டிபாபு தலையில் பலத்த காயங்களுடன் இறந்து கிடப்பதாக அரக்கோணம் தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்தனர்.
விசாரணையில், ராணிப்பேட்டை மாவட்டம், பாணாவரம் அடுத்த கூத்தம்பாக்கம் பகுதியை சேர்ந்த தசரதன், 52, திண்டிவனம் பகுதியை சேர்ந்த கண்ணதாசன் 26, ரவி, 42, ஆகிய மூவருக்கும், சிட்டிபாபுவுக்கும் பணம் கொடுத்து வாங்குவதில் பிரச்னை இருந்துள்ளது.
கடந்த 14ம் தேதி இரவு மூவரும் மதுபோதையில் வந்து, சிட்டிபாபுவை இரும்பு ராடால் தாக்கியதில் அவர் இறந்தது தெரிந்தது. இதையடுத்து நேற்று முன்தினம் இரவு, மூவரையும் போலீசார் கைது செய்தனர்.