/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ கன்டெய்னர் சரிந்து விழுந்ததில் ஓட்டுனர் பலி கன்டெய்னர் சரிந்து விழுந்ததில் ஓட்டுனர் பலி
கன்டெய்னர் சரிந்து விழுந்ததில் ஓட்டுனர் பலி
கன்டெய்னர் சரிந்து விழுந்ததில் ஓட்டுனர் பலி
கன்டெய்னர் சரிந்து விழுந்ததில் ஓட்டுனர் பலி
ADDED : ஜூலை 13, 2024 08:29 PM

மீஞ்சூர்:திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்த காட்டுப்பள்ளியில் உள்ள எண்ணுார் காமராஜர் துறைமுக வளாகத்தில், பல்வேறு நிறுவனங்கள் முனையம் அமைத்து, சரக்குகளை கையாள்கின்றன.
இங்கு நிலக்கரி, பெட்ரோல், டீசல், எரிவாயு, மின்னணு பொருட்கள், வாகனங்கள், உணவு பொருட்கள் என, பல்வேறு பொருட்கள் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யப்படுகின்றன.
துறைமுக வளாகத்தில், அதானி நிறுவனத்தின் முனையமும் அமைந்துள்ளது. இங்குள்ள கிடங்கிற்கு, காலி கன்டெய்னர் ஏற்றுவதற்காக, நேற்று காலை லாரி ஒன்று வந்து நிறுத்தப்பட்டது.
முனையத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த காலி கன்டெய்னர்களில் ஒன்றை, கிரேன் உதவியுடன் துாக்கி, லாரியில் வைக்கும் பணி நடந்தது.
அப்போது, எதிர்பாராமல் கன்டெய்னர்கள் அடுத்தடுத்து சரிந்து விழுந்தன. அதில் ஒன்று, அங்கு நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது விழுந்து, கேபின் பகுதி நசுங்கியது.
அதன் உள்ளே இருந்த, விழுப்புரம் மாவட்டம், கடப்பேரி குப்பத்தைச் சேர்ந்த ஓட்டுனர் நாகராஜன், 40, கன்டெய்னர் விழுந்ததில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார்.
லாரியின் கேபின் மீது விழுந்திருந்த கன்டெய்னர், மற்றொரு கிரேன் உதவியுடன் துாக்கப்பட்டது. பின், கேபினின் நசுங்கிய பகுதியில் சிக்கி உயிரிழந்த நாகராஜனின் உடல் மீட்கப்பட்டது.
தகவலறிந்த மீஞ்சூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, நாகராஜனின் உடலை பிரேத பரிசோதனைக்கு, சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பினர்.
கன்டெய்னர் சரிந்து, லாரி டிரைவர் உடல் நசுங்கி இறந்த சம்பவம் சக ஓட்டுனர்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து துறைமுக வளாகத்தில் லாரி ஓட்டுனர்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லை. இறந்த ஓட்டுனர் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனக்கூறி, 50க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காவல் மற்றும் துறைமுக அதிகாரிகள், போராட்டத்தில் ஈடுபட்டோரிடம் பேச்சு மேற்கொண்டனர். விபத்து குறித்தும், மீஞ்சூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.