Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ பெரியபாளையம் ஹோட்டல்களில் கெட்டுப்போன இறைச்சி பறிமுதல்

பெரியபாளையம் ஹோட்டல்களில் கெட்டுப்போன இறைச்சி பறிமுதல்

பெரியபாளையம் ஹோட்டல்களில் கெட்டுப்போன இறைச்சி பறிமுதல்

பெரியபாளையம் ஹோட்டல்களில் கெட்டுப்போன இறைச்சி பறிமுதல்

ADDED : ஜூலை 12, 2024 10:42 PM


Google News
Latest Tamil News
பெரியபாளையம்:உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையில் ஹோட்டல்கள், டீக்கடைகளில் காலாவதியான இறைச்சி, டீத்துாள், பிளாஸ்டிக் பொருட்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பெரியபாளையம் பவானியம்மன் கோவிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்வர். இங்கு வரும் பக்தர்கள் இங்குள்ள ஹோட்டல்கள், குளிர்பான கடைகள், டீக்கடைகளில் தங்களின் உணவு தேவையை பூர்த்தி செய்து கொள்கின்றனர்.

ஆனால் இங்குள்ள வியாபார நிறுவனங்களில் காலாவதியான பொருட்கள், கலப்பட டீத்துாள் ஆகியவை விற்பதாக கலெக்டருக்கு தகவல் கிடைத்தது.

கலெக்டர் பிரபுசங்கர் உத்தரவின்படி மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் மருத்துவர் சதீஷ்குமார், மேற்பார்வையில் உணவு பாதுகாப்பு அதிகாரி கார்மேகம் மற்றும் பெரியபாளையம் போலீசார் அங்குள்ள ஹோட்டல்கள், குளிர்பான கடைகள், டீக்கடைகள் ஆகியவற்றில் நேற்று திடீர் சோதனை மேற்கொண்டனர்.

இதில் 5 ஹோட்டல்களில் கெட்டுப்போன மாட்டு இறைச்சி 25 கிலோ, மட்டன் 10 கிலோ, கலர் பவுடர் கலந்த சிக்கன் 25 கிலோ, 150 கிலோ பிரியாணி, கலப்பட டீத்துாள் 5 கிலோ, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் 10 கிலோ ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பிளாஸ்டிக் பொருட்கள் விற்ற இரண்டு கடைகளுக்கு 4,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

பக்தர்கள் கூறியதாவது:

பெரியபாளையம் பவானியம்மன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்கு வருகின்றோம். இங்கு தங்க இடவசதி, உணவு ஆகியவை தட்டுப்பாடாக உள்ளது. இதனால் கோவில் எதிரில் உள்ள ேஹாட்டல்கள் மற்றும் பேருந்து நிலையத்தை சுற்றியுள்ள கடைகளுக்குச் சென்று எங்களின் உணவு தேவையை பூர்த்தி செய்கிறோம்.

குழந்தைகளுக்கும் இந்த உணவுகளை தான் வாங்கி தருகிறோம். ஆனால், இங்கு காலாவதி உணவு, கலப்பட டீத்துாள் ஆகியவற்றை விற்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வரும், 17 ம் தேதி ஆடி மாதம் பிறக்க உள்ள நிலையில் தினமும் அதிகளவு பக்தர்கள் இங்கு வருவர். எனவே, காலாவதி உணவு, கலப்பட உணவு வகைகள் ஆகியற்றை விற்கும் கடைகளின் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து, சம்பந்தப்பட்ட கடைக்கு ‛சீல்' வைக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us