/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ பழவேற்காடில் மோதல் அபாயம் அதிகாரிகள் சமரச பேச்சு பழவேற்காடில் மோதல் அபாயம் அதிகாரிகள் சமரச பேச்சு
பழவேற்காடில் மோதல் அபாயம் அதிகாரிகள் சமரச பேச்சு
பழவேற்காடில் மோதல் அபாயம் அதிகாரிகள் சமரச பேச்சு
பழவேற்காடில் மோதல் அபாயம் அதிகாரிகள் சமரச பேச்சு
ADDED : ஜூலை 15, 2024 11:13 PM
பழவேற்காடு: பழவேற்காடு மீனவ பகுதியில், 15 மீனவ கிராமத்தினர் கடலில் மீன்பிடி தொழில் செய்கின்றனர். இந்நிலையில், வெளி மாவட்டங்களை சேர்ந்த விசைப்படகு மீனவர்கள், பழவேற்காடு கடற்கரை பகுதிக்கு அருகில் மீன்பிடி தொழில் செய்கின்றனர்.
கடற்கரை அருகே மற்றும் பைபர் படகுகள் தொழில் செய்யும் இடங்களிலும், விசைப்படகுகள் வரக்கூடாது என்ற கட்டுப்பாட்டை மீறியும், தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி வருகின்றனர்.
இதனால் பழவேற்காடு பகுதி மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்யும் இடங்களில், மீன்வளம் குறைந்து, வருவாய் இழப்பிற்கு ஆளாகி உள்ளனர்.
மீனவர்கள் தொழிலுக்கு செல்வதையும் அவ்வப்போது தவிர்த்து வருகின்றனர். அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை இல்லாததால் கட்டுப்பாடுகளை மீறி பழவேற்காடு பகுதியில் மீன்பிடி தொழிலில் ஈடுபடும் விசைப்படகுகளை சுற்றிவளைத்து சிறைபிடிக்க மீனவர்கள் திட்டமிட்டனர்.
இதனால், இரு தரப்பு மீனவர்களுக்கு இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானது. அதையடுத்து, நேற்று மீனவ கிராம நிர்வாகிகளிடம் அரசு தரப்பில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
பொன்னேரி தாசில்தார் மதிவாணன், மாவட்ட மீன்வளத்துறை உதவி இயக்குனர் அஜய் ஆனந்த், செங்குன்றம் காவல் உதவி ஆணையர் ராஜா ராபர்ட் ஆகியோரிடம் மீனவர்கள், வெளிமாவட்ட மீனவர்களால் தங்களது வாழ்வாதாரம் பாதித்து, வருவாய் இழந்திருப்பதை தெரிவித்து முறையிட்டனர்.
மீனவர்களிடம் அதிகாரிகள் கூறியதாவது:
வெளி மாவட்ட விசைப்படகுகள், பழவேற்காடு பகுதியில் மீன்பிடி தொழில் செய்வது குறித்து, அந்தந்த மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
இரு தரப்பு மீனவர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் நடத்தி, இப்பிரச்சனைக்கு சுமூக தீர்வு காணப்படும். உயர் அதிகாரிகளுக்கும் உடனடியாக தெரிவிக்கப்படும்.
பழவேற்காடு பகுதி மீனவர்கள், விசைப்படகுகளை சிறைபிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம். தேவையற்ற பதற்றத்தை உருவாக்க வேண்டாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.