/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ அனுப்பம்பட்டில் இடிந்து விழும் அரசு வீடுகள் அச்சத்துடன் வாழும் குடியிருப்புவாசிகள் அனுப்பம்பட்டில் இடிந்து விழும் அரசு வீடுகள் அச்சத்துடன் வாழும் குடியிருப்புவாசிகள்
அனுப்பம்பட்டில் இடிந்து விழும் அரசு வீடுகள் அச்சத்துடன் வாழும் குடியிருப்புவாசிகள்
அனுப்பம்பட்டில் இடிந்து விழும் அரசு வீடுகள் அச்சத்துடன் வாழும் குடியிருப்புவாசிகள்
அனுப்பம்பட்டில் இடிந்து விழும் அரசு வீடுகள் அச்சத்துடன் வாழும் குடியிருப்புவாசிகள்
ADDED : ஜூன் 07, 2024 02:03 AM

பொன்னேரி:மீஞ்சூர் ஒன்றியம், அனுப்பம்பட்டு ஊராட்சி, 8வது வார்டிற்கு உட்பட்ட சின்னகாலனி பகுதியில், 33 ஆண்டுகளுக்கு முன், 42 தொகுப்பு வீடுகள் தமிழக அரசால் கட்டப்பட்டன.
அவை, தற்போது முற்றிலும் சேதமடைந்து உள்ளன. சுவர்களில் விரிசல்கள் ஏற்பட்டும், சிமென்ட் பூச்சுக்கள் பெயர்ந்து உள்ளன. வீடுகளின் உட்புற கூரைகள் அவ்வப்போது பெயர்ந்து, அதில் வாழும் குடியிருப்புவாசிகள் மீது விழுகிறது. சிறு சிறு காயங்களுடன் உயிர் தப்புகின்றனர்.
கூரைகள் சிமென்ட் பூச்சுகள் இல்லாமல், உள்ளிருக்கும் இரும்புக் கம்பிகள் எலும்புக் கூடுகளாக காட்சி தருகின்றன. ஒவ்வொரு மழையின்போதும், குடியிருப்புகள் இடிந்து விழுந்து அசம்பாவிதங்கள் நேரிடுமோ என்ற அச்சத்தில் குடியிருப்புவாசிகள் உள்ளனர்.
நேற்று முன்தினம் பெய்த கனமழையின்போது, அப்பகுதியைச் சேர்ந்த செல்வம் மனைவி மோகனா, 45, என்பவரது வீட்டின் கூரை மொத்தமாக பெயர்ந்து உள்ளே விழுந்தது. அச்சமயம் மோகனா மற்றும் அவரது குழந்தைகள் வெளியில் இருந்ததால், அசம்பாவிதங்களில் சிக்காமல் தப்பினர். அதே சமயம் வீட்டின் உள்ளே இருந்த உடைமைகள் சேதமடைந்தன.
தற்போது வசிக்க வீடு இன்றி, குடும்பத்தினருடன் தெருவில் உணவு சமைத்து தங்கும் நிலைக்கு ஆளாகி உள்ளார்.
இந்த குடியிருப்புகளில் வசிப்போர், கூலித்தொழிலாளிகளாக உள்ள நிலையில், புதிதாக வீடு கட்டவும், சேதமடைந்த வீடுகளை புதுப்பிக்கவும் வசதியின்றி தவித்து வருகின்றனர்.
இதுகுறித்து குடியிருப்புவாசிகள் கூறியதாவது:
குடியிருப்புகள் சேதமடைந்தது குறித்து பலமுறை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றும் நடவடிக்கை இல்லை. உயிர்பலி ஏற்பட்டால் தான், அரசின் கவனம் எங்கள் பக்கம் திரும்புமா என தெரியவில்லை. தினம் தினம் அச்சத்துடனும் வாழ்ந்து வருகிறோம்.
குறிப்பாக மழைக்காலம் வந்தால், இரவு துாக்கத்தை தொலைத்துவிட்டு, வீட்டின் ஒவ்வொரு பகுதியையும் கவனிக்கும் நிலையில் தான் உள்ளோம். கிடைக்கும் வருவாய் அன்றாட தேவைக்கே போதுமானதாக இல்லை. இதில் எங்கிருந்து புதிதாக குடியிருப்புகளை கட்டுவது. தமிழக அரசு தான் எங்களுக்கு உதவ வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.