/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ மருந்தகம், மருத்துவமனையில் 'ரெய்டு' ரூ.9 லட்சம் தாய்ப்பால், பவுடர் பறிமுதல் மருந்தகம், மருத்துவமனையில் 'ரெய்டு' ரூ.9 லட்சம் தாய்ப்பால், பவுடர் பறிமுதல்
மருந்தகம், மருத்துவமனையில் 'ரெய்டு' ரூ.9 லட்சம் தாய்ப்பால், பவுடர் பறிமுதல்
மருந்தகம், மருத்துவமனையில் 'ரெய்டு' ரூ.9 லட்சம் தாய்ப்பால், பவுடர் பறிமுதல்
மருந்தகம், மருத்துவமனையில் 'ரெய்டு' ரூ.9 லட்சம் தாய்ப்பால், பவுடர் பறிமுதல்
ADDED : ஜூன் 04, 2024 06:11 AM

சென்னை, : தாய்ப்பாலை பவுடராக்கி விற்பனை செய்து வந்த கிடங்கில் இருந்து, 450 தாய்ப்பால் புட்டிகள், 800 பவுடர் பாக்கெட்டுகளை, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சென்னை, மாதவரத்தில் உள்ள தனியார் மருந்து விற்பனையகத்தில், தாய்ப்பால் விற்கப்படுவதாக மத்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்திற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, திருவள்ளூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அங்கு, சட்ட விரோதமாக விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த தாய்ப்பால் அடைக்கப்பட்ட 200 மி.லி., அளவுடைய புட்டிகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், மருந்தகத்திற்கு 'சீல்' வைத்தனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, தமிழகம் முழுதும் தாய்ப்பால் விற்பனை குறித்து கண்காணித்து நடவடிக்கை எடுக்க, தனித்தனி குழுக்கள் அமைக்கப்பட்டன.
அதில், சென்னை மாவட்டத்தில் 18 குழுக்கள் அமைக்கப்பட்டு, மருந்தகங்கள், மகப்பேறு மருத்துவமனைகள் கண்காணிக்கப்பட்டன.
இந்நிலையில், சென்னை அரும்பாக்கம், கோல பெருமாள் பள்ளி தெருவில் உள்ள ஆர்.கே.பார்மா என்ற தனியார் மருந்து மொத்த விற்பனையகத்தில், சட்டத்துக்கு புறம்பாக தாய்ப்பால் விற்பனை நடப்பதாக, உணவு பாதுகாப்பு துறைக்கு தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில், சென்னை மாவட்ட நியமன அலுவலர் சதீஷ்குமார், அதிகாரி சதாசிவம் உள்ளிட்டோர், வினியோகிஸ்தரின் கிடங்கில் நேற்று திடீர் ஆய்வு செய்தனர்.
இதில், 50 மி.லி., அளவு உடைய 450 புட்டிகளில் தாய்ப்பால் அடைக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது. மேலும், தாய்ப்பாலை பவுடர் முறையில், 5 கிராம் அளவில், 800 பாக்கெட்கள் வைக்கப்பட்டிருந்தது தெரிந்தது. இவற்றின் மதிப்பு, 9 லட்சம் ரூபாய் என கணக்கிடப்பட்டு உள்ளது.
மைனஸ் 10 டிகிரி செல்சியஸில் பதப்படுத்தி வைக்கப்பட்டிருந்த இவற்றை, பறிமுதல் செய்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், பரிசோதனைக்காக, கிண்டி ஆய்வகத்துக்கு மாதிரிகளை அனுப்பி வைத்தனர். மேலும், அந்த கிடங்கில் தாய்ப்பால் புட்டிகள் அடங்கிய குளிரூட்டப்பட்ட பெட்டிக்கு, அதிகாரிகள் 'சீல்' வைத்தனர்.
இந்த புட்டிகள், 2,500 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வந்ததாக விசாரணையில் தெரிய வந்தது. தொடர்ந்து, பிரசாந்த் பெர்டிலிட்டி மருத்துவமனையிலும், அதிகாரிகள் சோதனை செய்தனர்.
இதுகுறித்து, உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் சதீஷ்குமார் அளித்த பேட்டி:
மருந்து விற்பனையகத்தினர் தாய்ப்பாலை, கர்நாடகாவில் உள்ள நிறுவனத்திடம் இருந்து கொள்முதல் செய்துள்ளனர். ஓராண்டுக்கும் மேலாக சென்னையில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளுக்கு, அவற்றை விற்பனை செய்துள்ளனர்.
அந்த மருத்துவமனைகளின் பட்டியல் பெறப்பட்டுள்ளது. ஓராண்டுக்கு தாய்ப்பால் கெட்டுப்போகாது என, லேபிளில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
இதையொட்டி, சேகரிக்கப்பட்ட மாதிரிகளின் ஆய்வு முடிவுகள் வரும்போது, அதற்கேற்ப நடவடிக்கைகள் எடுக்கப்படும். தொடர்ந்து விசாரணை நடத்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.