/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ பெரியபாளையம் பவானியம்மன் கோவில் கும்பாபிஷேகம் விமரிசை பெரியபாளையம் பவானியம்மன் கோவில் கும்பாபிஷேகம் விமரிசை
பெரியபாளையம் பவானியம்மன் கோவில் கும்பாபிஷேகம் விமரிசை
பெரியபாளையம் பவானியம்மன் கோவில் கும்பாபிஷேகம் விமரிசை
பெரியபாளையம் பவானியம்மன் கோவில் கும்பாபிஷேகம் விமரிசை
ADDED : ஜூலை 12, 2024 10:45 PM

பெரியபாளையம்:திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் பவானியம்மன் கோவில் பிரசித்த பெற்ற அம்மன் கோவில்களில் ஒன்று. மூலவர் அம்மன் சுயம்பு வடிவில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இங்கு செவ்வாய், வெள்ளி, ஞாயிறு மற்றும் விசேஷ நாட்களில் அதிகளவு பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்வர். இங்கு ஆடி மாத விழா ஞாயிற்றுக்கிழமை துவங்கி, 14 வாரங்கள் நடைபெறும். இதில் தமிழகம், ஆந்திர மாநிலங்களின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்வர்.
இங்கு அற்புத சக்தி வினாயகர், பவானி அம்மன் சன்னிதி, விமானம், நான்கு கோபுரங்கள், சக்தி மண்டபம், சர்வ சந்ததோஷ சக்தி மாதங்களி அம்மன் வள்ளி, தெய்வானை சமேத முருகப் பெருமான், மகாலட்சுமி தாயாருடன் சீனிவாசபெருமாள், பரசுராமர், ஆஞ்சநேயர், புற்றுக்கோவில் மற்றும் இக்கோவிலின் உபகோவில்களான காதர்வேடு வினாயகர் கோவில் ஆகியவற்றிற்கு கும்பாபிஷேகம் நடந்து, 12 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது.
இதையடுத்து கும்பாபிேஷகம் நடத்த வேண்டி சில மாதங்களுக்கு முன் பணிகள் துவங்கி, ‛விறுவிறு' வென நடந்தது.
நேற்று காலை கும்பாபிேஷகம் நடந்தது. இதையொட்டி, கடந்த, 10ம் தேதி காலை, 8:00 மணிக்கு விக்னேஷ்வரர் பூஜை, கணபதி ேஹாமம், நவக்கிரக ேஹாமம், லட்சுமி ேஹாமம், பூர்ணாஹூதி, தீபாராதனை நடந்தது. மாலை, 4:00 மணிக்கு வாஸ்து சாந்தி, பிரவேச பலி, கும்ப அலங்காரம், அங்குரார்ப்பணம், பூதசுத்தி, முதல்கால யாகபூஜை, சதுர்வேத பாராயணம், திருமறைபாராயணம் நடந்தது.
நேற்று முன்தினம் காலை, 8:30 மணிக்கு இரண்டாம் கால யாகபூஜை நடந்தது. நேற்று காலை, 4:00 மணிக்கு அவபிரதயாகம், யாகபூஜை, மகா பூர்ணாஹூதி, யாத்ராதானம், கலச புறப்பாடு நடந்தது. தொடர்ந்து காலை, 5:30 மணிக்கு ராஜகோபுரம், பரிவாரங்கள், காதிர்வேடு வினாயகர் கோவில், பவானியம்மன் சன்னிதிகளுக்கு மகா கும்பாபிேஷகம் நடந்தது.
கும்பாபிேஷ புனிதநீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். கும்பாபிேஷக பூஜைகள் சிவாகமம் மற்றும் வைகானச முறைப்படி, வேதமூர்த்தி சிவாச்சாரியார், தாசரதி பட்டாச்சார்யார் ஆகியோர் தலைமையில் நடந்தது.
பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் பிரசாம் வழங்கப்பட்டது. இரவு, 7:00 மணிக்கு உற்சவர் வினாயகர், பவானியம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா வந்து அருள்பாலித்தனர்.
ஊத்துக்கோட்டை டி.எஸ்.பி., கணேஷ்குமார் தலைமையில் 800க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த, ஆந்திராவில் இருந்து தமிழகம் நோக்கி வந்த கனரக வாகனங்கள் ஊத்துக்கோட்டையில் இருந்து திருவள்ளூர், சத்தியவேடு வழியாக திருப்பி விடப்பட்டன.
***