/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ குடிநீர் வாரிய அதிகாரிகள் அலட்சியம் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள் குடிநீர் வாரிய அதிகாரிகள் அலட்சியம் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
குடிநீர் வாரிய அதிகாரிகள் அலட்சியம் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
குடிநீர் வாரிய அதிகாரிகள் அலட்சியம் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
குடிநீர் வாரிய அதிகாரிகள் அலட்சியம் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
ADDED : ஜூன் 24, 2024 05:02 AM

திருத்தணி: திருத்தணி நகராட்சியில் குடிநீர் பிரச்னை தீர்க்க, கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன், 110 கோடி ரூபாய் மதிப்பில், திருப்பாற்கடல் கூட்டுக்குடிநீர் திட்டம் கொண்டு வரும் திட்டப்பணி துவங்கியது.
இப்பணிகளை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மேற்கொண்டது. திருப்பாற்கடலில் இருந்து திருத்தணி நகராட்சிக்கு ராட்சத குழாய்கள் அமைத்து, கடந்த பிப்ரவரி மாதம் திருத்தணி சேகர்வர்மா நகரில் உள்ள குடிநீர் சேமிக்கும் நீர்தேக்க தொட்டிக்கு குடிநீர் வந்தடைந்தது.
மேலும், நகராட்சியில் 21 வார்டுகளிலும் குடியிருப்புகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்குவதற்கு சாலைகள் தோண்டி குழாய்கள் புதைக்கும் பணி கடந்த மூன்று ஆண்டுகளாக நடந்து வருகிறது.
ஆனால் முறையாக குடியிருப்புகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்காததால், மீண்டும் சாலைகளை தோண்டி, குழாய்கள் புதைக்கும் பணி நடந்து வருகிறது. சாலைகளில் தோண்டும் பள்ளங்களை குடிநீர் வாரியம் முழுமையாக மூடாமல், அரைகுறையாக விடுவதால் சாலைகளில் மெகா பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன.
இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து செல்பவர்கள் அடிக்கடி சாலையில் உள்ள பள்ளங்களில் தவறி விழுந்து காயத்துடன் செல்கின்றனர். திருத்தணி காந்தி ரோடு, பழைய பஜார் தெரு, ஜோதிசாமி தெரு, மேட்டுத் தெரு மற்றும் பெரிய தெரு ஆகிய இடங்களில் சிமென்ட் சாலைகள் சேதமடைந்துள்ளன.
மேற்கண்ட சாலைகள் வழியாக அரசு மற்றும் தனியார் பள்ளிகள், அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு மருத்துவமனைக்கு அதிகளவில் வாகன ஓட்டிகள் செல்கின்றனர்.மேற்கண்ட சாலைகளை சீரமைக்க வேண்டும் என நகராட்சி நிர்வாகத்திடம் தெரிவிக்கும் போது, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், பணிகள் முழுமையாக முடிந்தது என சான்று கொடுத்தால் மட்டுமே சாலை சீரமைக்க முடியும் என கைவிரிக்கின்றனர்.
எனவே மாவட்ட கலெக்டர் உடனடியாக நகராட்சியில் சேதமடைந்த சாலைகள் சீரமைக்க உத்தரவிட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்கின்றனர்.