/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ பராமரிப்பு இல்லாத நிழற்குடைகள் மதுக்கூடமாக மாறி வரும் அவலம் பராமரிப்பு இல்லாத நிழற்குடைகள் மதுக்கூடமாக மாறி வரும் அவலம்
பராமரிப்பு இல்லாத நிழற்குடைகள் மதுக்கூடமாக மாறி வரும் அவலம்
பராமரிப்பு இல்லாத நிழற்குடைகள் மதுக்கூடமாக மாறி வரும் அவலம்
பராமரிப்பு இல்லாத நிழற்குடைகள் மதுக்கூடமாக மாறி வரும் அவலம்
ADDED : ஜூன் 02, 2024 12:20 AM

கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்டது பாப்பரம்பாக்கம் ஊராட்சி. இங்கிருந்து மண்ணுார் செல்லும் சாலையில், போளிவாக்கம் கிராமம் செல்லும் சாலை சந்திப்பில் நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிழற்குடையை பயன்படுத்தி பகுதிவாசிகள் போளிவாக்கம், ஸ்ரீபெரும்புதுார், பூந்தமல்லி, திருவள்ளூர் மார்க்கமாக சென்று வருகின்றனர்.
இந்த நிழற்குடை கடந்த மூன்று ஆண்டுகளாக எவ்வித பராமரிப்பும் இல்லாததால் சேதமடைந்து, புதர் மண்டி காணப்படுகிறது. இந்த நிழற்குடையை 'குடி'மகன்கள் மது அருந்தும் இடமாக மாற்றி விட்டனர்.
இதனால், இந்த நிழற்குடையை பயன்படுத்த முடியாமல் பயணியர் அவதிப்பட்டு வருகின்றனர். நிழற்குடையை சீரமைக்க பலமுறை புகார் அளித்தும், ஊராட்சி நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என, பகுதிவாசிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட ஒன்றிய அதிகாரிகள் நிழற்குடையை சீரமைத்து மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பயனில்லாத நிழற்குடை
ஆர்.கே.பேட்டையில் இருந்து பள்ளிப்பட்டு செல்லும் மாநில நெடுஞ்சாலையில் இருந்து பிரிந்து செல்கிறது, அப்பல்ராஜி கண்டிகை மற்றும் சாமிநாயுடு கண்டிகை கிராமம்.
இந்த கூட்டு சாலையில், பயணியர் வசதிக்காக நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. அப்பல்ராஜி கண்டிகை வழியாக வங்கனுார், ஜி.சி.எஸ்.கண்டிகை, இ.எம்.ஆர்.கண்டிகை என, 20க்கும் மேற்பட்ட கிராமத்தினர், இந்த நிழற்குடையில் இருந்து பேருந்தில் பயணம் மேற்கொள்கின்றனர்.
இங்கிருந்து பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை மற்றும் சோளிங்கர் உள்ளிட்ட பகுதிகளுக்கு பயணிக்கின்றனர். முக்கியத்துவம் வாய்ந்த இந்த நிழற்குடை பராமரிப்பு இல்லாததால், தற்போது பாழடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது.
நிழற்குடையை 'குடி'மகன்கள் மது அருந்தும் இடமாக மாற்றி விட்டனர்.
இதனால், பயணியர் நிழற்குடையை பயன்படுத்த முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். நிழற்குடையை சீரமைத்து, பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பஸ் நிறுத்தம்
ஊத்துக்கோட்டை - பெரியபாளையம் மாநில நெடுஞ்சாலையில், பாலவாக்கம் அடுத்து, இடதுபுறம் சாலையில் கீழ்கரமனுார் கண்டிகை கிராமம் உள்ளது.
இங்கு, 2,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் தொடக்கப் பள்ளி மட்டுமே உள்ளது. ஆறாம் வகுப்பிற்கு மேல் படிக்க, ஊத்துக்கோட்டை அல்லது பெரியபாளையம் செல்கின்றனர்.
மேலும், மாணவர்கள், வெளியூர் வேலைக்கு செல்பவர்கள் அரசு மற்றும் தனியார் போக்குவரத்தை நம்பியே உள்ளனர். இங்குள்ள பேருந்து நிறுத்தத்தின் முன்பகுதி நீர்வரத்து கால்வாய் உள்ளது.
இதில் ஒரு பகுதி சிமென்ட் குழாய் புதைக்கப்பட்டு, அதன் மூலம் தண்ணீர் செல்லும் வகையில் அமைக்கப்பட்டது.
மீதிமுள்ள பகுதி எவ்வித குழாயும் அமைக்கவில்லை.
இதனால் பேருந்து நிறுத்தம் செல்லும் வழியில் பெரிய பள்ளம் போல் காணப்படுகிறது. இரவு நேரங்களில் பேருந்தில் ஏற வேண்டிய அவசரத்தில், இந்த பள்ளத்தில் பயணியர் விழுந்து காயம் அடைகின்றனர்.
எனவே, பெரிய அளவில் விபத்து ஏற்படும் முன், கீழ்கரமனுார் கண்டிகை நிறுத்தத்தில் உள்ள கால்வாயை சீரமைக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.