Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ பெரியபாளையம் புறவழிச்சாலை திட்டம் கிடப்பில் போக்குவரத்து பாதிப்பால் தொழிற் சாலைகள் தவிப்பு

பெரியபாளையம் புறவழிச்சாலை திட்டம் கிடப்பில் போக்குவரத்து பாதிப்பால் தொழிற் சாலைகள் தவிப்பு

பெரியபாளையம் புறவழிச்சாலை திட்டம் கிடப்பில் போக்குவரத்து பாதிப்பால் தொழிற் சாலைகள் தவிப்பு

பெரியபாளையம் புறவழிச்சாலை திட்டம் கிடப்பில் போக்குவரத்து பாதிப்பால் தொழிற் சாலைகள் தவிப்பு

ADDED : ஜூலை 13, 2024 09:13 PM


Google News
Latest Tamil News
கும்மிடிப்பூண்டி:தொழிற்சாலைகளின் மூலப்பொருட்கள் மற்றும் உற்பத்தி பொருட்களை தங்கு தடையின்றி எளிதாக கொண்டு செல்லும் நோக்கில் சாலை போக்குவரத்து வசதிக்கு தொழில் நிறுவனங்கள் முக்கியத்துவம் அளிப்பர். அதன் அடிப்படையில் சென்னையில் இருந்து சீரான சாலை போக்குவரத்து வசதி கொண்ட பகுதிகளில், தமிழக அரசு சார்பில் சிப்காட் வளாகங்கள் துவங்கப்பட்டுள்ளன.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து சிப்காட் வளாகங்களுக்கும் சீரான சாலை போக்குவரத்து வசதி உள்ள நிலையில், கும்மிடிப்பூண்டி தாலுகாவிற்கு உட்பட்ட தேர்வாய் கண்டிகை சிப்காட் வளாகம் மட்டும் அதற்கு விதிவிலக்காக அமைந்துள்ளது. அங்கு இயங்கும் தொழிற்சாலைகளுக்கு கடும் சவாலாக இருப்பது சாலை போக்குவரத்தில் உள்ள சிரமம் மட்டுமே என்ற நிலை கடந்த, 14 ஆண்டுகளாக தொடர்கிறது.

தேர்வாய்கண்டிகை சிப்காட்


தேர்வாய்கண்டிகை சிப்காட் வளாகம், 2010ம் ஆண்டு, 1127 ஏக்கர் பரப்பளவில் துவங்கப்பட்டது. தற்போது, பன்னாட்டு நிறுவனங்களின் தொழில் வளாகமாக விஸ்வரூபம் எடுத்துள்ளது. மிஷ்லின் டயர் தொழிற்சாலை, பிலிப்ஸ் கார்பன், பேட்டர் இந்தியா, சுந்தரம் க்ளேட்டன், வீல்ஸ் இந்தியா, பிரேக்ஸ் இந்தியா உட்பட மொத்தம், 46 தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.

அங்குள்ள தொழிற்சாலைகளுக்கு கன்டெய்னர் லாரிகள் உட்பட தினசரி, 350 கனரக வாகனங்கள் வந்து செல்கின்றன. இவை தவிர நுாற்றுக்கணக்கான கார், வேன், பேருந்துகளில், தொழிலாளர்கள், ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் வந்து செல்கின்றனர்.

ஸ்தம்பிக்கும் பெரியபாளையம்


மேற்கண்ட அனைத்து வகை வாகனங்களும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து தேர்வாய் கண்டிகை சிப்காட் வளாகத்திற்கு வந்து செல்கின்றன. அந்த வாகனங்கள், சென்னை -- கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில் ஜனப்பன்சத்திரம் கூட்டு சாலையில் இருந்து கன்னிகைபேர், பெரியபாளையம், தண்டலம் வழியாக தேர்வாய்கண்டிகை வரையிலான 27.4 கி.மீ., சாலையை கடந்து வர வேண்டும். இடைப்பட்ட சாலையில், வாகன போக்குவரத்தின் குரல்வளையை இறுக்கி பிடிப்பது போன்று பெரியபாளையம் பகுதி அமைந்துள்ளது.

பெரியபாளையம் பேருந்து நிலையம், அடுத்ததாக மூன்று சாலை சந்திப்பு, அதற்கு அடுத்து ஆரணி ஆற்று பாலம், இறுதியாக பவானி அம்மன் கோவில் என அடுத்தடுத்து நான்கு பிடிகளில் இருந்து வாகனங்கள் விடுபட்டு செல்வது என்பது சவாலான கட்டங்களை கடந்து செல்வது போன்ற உணர்வை ஏற்படுத்துவதாக வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக பெரியபாளையத்தில் உள்ள மூன்று சாலை சந்திப்பில், 90 டிகிரி கோண திருப்பத்தில், நீண்ட கன்டெய்னர்கள் திருப்ப முடியாமல் திணறி வருகின்றனர். பெரியபாளையத்தில் ஏற்படும் போக்குவரத்து ஸ்தம்பிப்பால், தேர்வாய் கண்டிகை சிப்காட் தொழிற்சாலைகளின் உற்பத்தியும் கடுமையாக பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

கிடப்பில் புறுவழிச்சாலை


மேற்கண்ட சாலை, 2023ம் ஆண்டுக்கு முன் வரை மாநில நெடுஞ்சாலை துறையினரின் பராமரிப்பில் இருந்தது. பெரியபாளையம் போக்குவரத்துக்கு தீர்வு காண புறவழிச்சாலை அமைக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்திருந்தது.

பெரியபாளையம் பகுதியில், சென்னை மற்றும் திருவள்ளூர் சாலைகள் சந்திக்கும் இடத்தில் இருந்து புறவழிச்சாலை பிரிந்து, வடமதுரை, எல்லாபுரம், மூங்கில்பட்டு, சிற்றைப்பாக்கம் வழியாக ஊத்துக்கோட்டை சாலையில் இணையும் வகையில் திட்டமிடப்பட்டது. அந்த புறவழிச்சாலை, 1600 மீட்டர் நீளம் கொண்ட நான்கு வழிச்சாலையாகும்.

முதலில், 2010ம் ஆண்டு, 11 கோடி ரூபாய் மதிப்பில் திட்டமிடப்பட்டு, பிறகு, 2014ம் ஆண்டு, 26 கோடி ரூபாயாக மறு மதிப்பீடு செய்யப்பட்டது. திட்டத்திற்கான நில எடுப்பு பணிகளை மாநில நெடுஞ்சாலை துறையினர் துரிதமாக மேற்கொண்டு வந்த நிலையில், 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் மேற்கண்ட சாலை தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டிற்கு சென்றது. அத்துடன் பெரியபாளையம் புறவழிச்சாலை திட்டமும் கிடப்பில் போனது. தமிழகத்தில் ஜனப்பன்சத்திரம் கூட்டு சாலையில் துவங்கி, ஆந்திர மாநிலம் புத்துார் வரையிலான, 72.4 கி.மீ., நீள சாலை, 716 ஏ என தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் எண்ணிடப்பட்டது

தேர்வாய் கண்டிகை சிப்காட் வளாக தொழிற்சாலைகளின் சாலை போக்குவரத்து பிரச்னைக்கு தீர்வு காண, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் துரித நடவடிக்கை எடுத்து கிடப்பில் உள்ள பெரியாபாளையம் புறவழிச்சாலை திட்ட பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என தொழில் முனைவோர் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த பிரச்னை குறித்து தேர்வாய் கண்டிகை சிப்காட் வளாகத்தில் இயங்கி வரும் தனியார் தொழிற்சாலை அலுவலர் ஒருவர் கூறுகையில், ‛பெரியபாளையத்தில் ஏற்படும் போக்குவரத்து சிக்கலால், உரிய நேரத்தில் தொழிலாளர்கள், ஊழியர்கள் வேலைக்கு வர முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால் பல சமயங்கள், 30 நிமிடங்கள் காலதாமதாக ‛ஷிப்ட்' துவங்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. மேலும் உரிய நேரத்தில் உற்பத்தி பொருட்கள் அனுப்ப முடியாமலும், மூலப்பொருட்கள் கிடைக்க பெறாமலும் தவித்து வருகிறோம். இதனால் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது' என தெரிவித்தார்.

இது குறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணைய திட்ட இயக்குனர் ரவீந்திர ராவ் கூறுகையில், ‛பெரியபாளையம் சாலையை மாநில நெடுஞ்சாலை துறையினரிடம் ஒப்படைப்பதற்கான பணிகள் நடந்து வருகிறது. அடுத்த ஒரு மாத காலத்திற்குள் அந்த சாலை பழையபடி மாநில நெடுஞ்சாலை துறையினர் வசம் ஒப்படைக்கப்படும்' என தெரிவித்தார்.

மாநில நெடுஞ்சாலை துறை அலுவலர் ஒருவர் கூறுகையில், ‛மாநில நெடுஞ்சாலை துறையினர் வசம் அந்த சாலை ஒப்படைத்தவுடன், பெரியபாளையம் புறவழிச்சாலை திட்ட பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்படும்' என தெரிவித்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us