ADDED : செப் 01, 2025 05:55 AM

திருநெல்வேலி:திருநெல்வேலியில் கார் டயர் வெடித்து டூவீலர் மீது மோதிய விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 3 ஆனது.நேற்று இறந்த மாணவி ராசியாவின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன.
திருநெல்வேலியை சேர்ந்தவர் சுரேஷ் 50. டூவீலர் உதிரி பாகங்கள் விற்பனை நிலையம் நடத்தி வருகிறார். இவரது மனைவி வருணா 46. மகள்கள் பிரவீனா, ராசியா ஆகியோர் ஆக., 24ம் தேதி காரில் துாத்துக்குடி நோக்கி சென்றனர். காரை சுரேஷ் ஓட்டினார்.
கே.டி.சி.நகர் அருகே சென்றபோது காரின் பின் டயர் திடீரென வெடித்து பல்டியடித்தது. கார் கட்டுப்பாட்டை இழந்து, இடது புற அணுகு சாலையில் எதிரே டூவீலரில் வந்த திருநெல்வேலி அரசு மருத்துவமனை பல் சிகிச்சை பிரிவு ஊழியர் மலர் 51, மீதுமோதியது. இதில் அவர் துாக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார். காரில் இருந்த சுரேஷ் குடும்பத்தினர் நால்வரும் இடிபாடுகளுக்குள் சிக்கி காயமுற்றனர். சிறிது நேரத்தில் சுரேஷ் மனைவி வருணாவும் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
ராசியாவின் கண்கள் தானம் காயமடைந்து சிகிச்சையில் இருந்த மாணவி ராசியா 18, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் மூளை சாவடைந்தார். எனவே அவரது கல்லீரல், கண்கள், சிறுநீரகங்கள் இங்கு தானமாக பெறப்பட்டன. டீன் டாக்டர் ரேவதி பாலன் தலைமையில் அவரது உடலுக்கு மரியாதை செய்து உடலை உறவினர்களிடமும் ஒப்படைத்தனர். மற்ற இருவரும் சிகிச்சையில் உள்ளனர்.