ADDED : ஜூலை 09, 2024 08:28 PM

திருநெல்வேலி:திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த டீக்கடை உரிமையாளர் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே ஆண்டிப்பட்டி வடக்கு கரும்பானுார் புதுமை நகரைச் சேர்ந்தவர் எம்மேல்பாண்டியன், 54. அதே பகுதியில் டீக்கடை நடத்தினார். கடந்த 5ம் தேதி ஆலங்குளத்தில் விபத்தில் காயமடைந்து தென்காசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
தலையில் பலத்த காயம் ஏற்பட்டு இருந்ததால், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. திடீரென அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டது.
இதையடுத்து, டாக்டர்களின் ஆலோசனையை ஏற்ற அவரது குடும்பத்தினர் பாண்டியனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய ஒப்புதல் அளித்தனர்.
எம்மேல்பாண்டியனின் இதயம் நேற்று அகற்றப்பட்டு சென்னை எம்.ஜி.எம்., ஹெல்த்கேர், கல்லீரல் திருச்சி அப்போலோ, ஒரு சிறுநீரகம் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லுாரி, மற்றொரு சிறுநீரகம் மதுரை அரசு ராஜாஜி, தோல் மதுரை கிரேஸ் கென்னட், கண் கருவிழிகள் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இவை தகுதியுள்ள நோயாளிகளுக்கு பொருத்தப்படுகின்றன. இருதயம் கொண்டு செல்லப்பட்ட வாகனம் விமான நிலையத்துக்கு விரைவாக செல்லும் வகையில் போலீசார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர்.
டீன் மரியாதை
உறுப்புகள் தானம் பெறப்பட்ட எம்மேல்பாண்டியன் உடலுக்கு டீன் ரேவதிபாலன், டாக்டர்கள், பணியாளர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அவரிடம் இருந்து பெறப்பட்ட உறுப்புகள் வாயிலாக ஏழு பேர் பயன் அடைவர் என டீன் ரேவதிபாலன் கூறினார்.