Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/ மாஞ்சோலை தொழிலாளர்கள் வாழ்வாதாரத்துக்காக காத்திருப்பு

மாஞ்சோலை தொழிலாளர்கள் வாழ்வாதாரத்துக்காக காத்திருப்பு

மாஞ்சோலை தொழிலாளர்கள் வாழ்வாதாரத்துக்காக காத்திருப்பு

மாஞ்சோலை தொழிலாளர்கள் வாழ்வாதாரத்துக்காக காத்திருப்பு

ADDED : ஜூன் 19, 2024 01:47 AM


Google News
திருநெல்வேலி:மாஞ்சோலை தேயிலை தோட்டத் தொழிலாளர்களுக்கு வனத்துறை சார்பில், விபர படிவம் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் அவர்களது விபரங்களை பூர்த்தி செய்து தருமாறு கூறப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் தாலுகா மேற்கு தொடர்ச்சி மலையில் 1929ல் மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து, குதிரை வெட்டி தேயிலை தோட்டங்கள் உருவாகின. பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் நிறுவனம் நடத்தி வரும் இத்தோட்டங்களின் குத்தகை காலம் 2028ல் முடிகிறது.

இதையடுத்து, பணியை நிறுத்தி கொள்ள முடிவெடுத்த பி.பி.டி.சி., நிர்வாகம் தொழிலாளர்களுக்கு விருப்ப ஓய்வு திட்டத்தை அறிவித்து, அமல்படுத்தி வருகிறது.

இந்நிலையில், மாஞ்சோலை தேயிலை தோட்டத் தொழிலாளர்களுக்கு வனத்துறை சார்பில், விபர படிவம் வழங்கப்பட்டுள்ளது. அந்தப் படிவத்தில் தங்களைப் பற்றிய விபரங்களை பூர்த்தி செய்து தருமாறு கூறப்பட்டுள்ளது.

வனத்துறை மூலம் வழங்கப்பட்ட அந்தப் படிவத்தில் தொழிலாளியின் பெயர், வயது, ஆணா பெண்ணா, தேயிலை தோட்டத்தில் தேயிலை பறிப்பவரா? மேற்பார்வையாளரா அல்லது மற்ற வேலை பார்ப்பவரா என்ற விவரங்கள் கேட்கப்பட்டுள்ளது.

மேலும் அவரின் வாக்காளர் அடையாள எண், எந்த பஞ்சாயத்தில் வசிக்கிறார் என்ற விபரமும், தனியார் தேயிலைத் தோட்ட அடையாள எண்ணும் மற்றும் குடும்ப அட்டை எண், சமுதாய பிரிவு, எந்த வருடத்தில் தேயிலை தோட்டத்திற்கு இடம்பெயர்ந்தார்? மனைவி மற்றும் கணவர் என்ன தொழில் செய்கிறார்? குழந்தைகளின் எண்ணிக்கை எத்தனை? குழந்தைகளின் தற்போது இருப்பிடம் மற்றும் அவர்கள் புரியும் தொழில் என்ன போன்ற விபரங்கள் கேட்கப்பட்டுள்ளன.

விருப்ப ஓய்வு திட்டத்தில் கையெழுத்து இட்டாரா? அரசிடமிருந்து முக்கியமாக எந்தவித உதவியை அவர் எதிர்பார்க்கிறார், நிலமாக உதவி எதிர்பார்க்கிறாரா? அல்லது அரசு ஒதுக்கீடு செய்யும் வீட்டினை எதிர்பார்க்கிறாரா? தேயிலை தோட்டத்தை தவிர்த்து அவர்களது பெயரில் உள்ள நிலம் மற்றும் வீட்டின் விபரங்கள் என்ன? தொழிலாளியின் பெற்றோர் மற்றும் அவர்கள் பெற்றோரின் சொந்த பஞ்., கிராமம் என்ன? இங்கிருந்து சென்ற பிறகு எந்த பஞ்., அல்லது கிராமத்தில் குடியமர்த்த விரும்புகிறார் என அனைத்து விவரங்களும் கேட்கப்பட்டுள்ளது.

இந்த விவரங்கள் அனைத்தையும் பூர்த்தி செய்து உடனடியாக வனத்துறை இடம் ஒப்படைக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாக தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் தகவல் அளித்துள்ளனர்.

தமிழக அரசு வனத்துறையின் சார்பில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியான மாஞ்சோலை நாலு முக்கு காக்காச்சி ஊத்து குதிரை வெட்டி பகுதியில் உள்ள வனத்துறை ஊழியர்கள் சார்பில் இந்த படிவம் கொடுக்கப்பட்டதாகவும் தோட்ட தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே மாஞ்சோலை தேயிலை தோட்ட பணிகள் 14-ம் தேதியுடன் முடிவு பெற்றுவிட்ட நிலையில் வீட்டினை காலி செய்வதற்கு 45 நாட்கள் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

தங்கள் வாழ்வாதாரத்திற்காக தமிழக அரசு ஏதாவது செய்யும் என்ற நம்பிக்கையில் மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்கள் காத்திருக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us