ADDED : ஜன 03, 2024 06:59 AM
கம்பம்; வெள்ள வெற்றிலை விலை ஜெட் வேகத்தில் உயர்வதால் கறுப்பு வெற்றிலை விலை குறைந்து வருகிறது.
வெற்றிலை மங்கலகரமானதும்,மருத்துவகுணம் கொண்டதால் அனைத்து விசேஷங்களிலும் முன்னிலை பெறுகிறது. மாவட்டத்தில் , கம்பம், மார்க்கையன்கோட்டை, சீலையம்பட்டி, பெரியகுளம், மேல்மங்கலம், ஜெயமங்கலம், சில்வார்பட்டி, வடுகபட்டி உள்ளிட்ட பல ஊர்களில் வெற்றிலை சாகுபடியாகிறது.
சின்னமனூர், பெரியகுளம் வட்டாங்களில் வெள்ளை மற்றும் கருப்பு வெற்றிலை பிரதானமாக சாகுபடியாகிறது.
தற்போது கறுப்பு வெற்றிலை விலை கிலோ ரூ.220 ல் இருந்து ரூ. 180 ஆக குறைந்துள்ளது . மாறாக வெள்ளை வெற்றிலை ரூ.250 ல் இருந்து 280 ஆக உயர்ந்துள்ளது. வெளிமாநிலங்களுக்கு அனுப்புவதும், விற்பனையும் குறைந்துள்ளது.
இதற்கிடையே பனியின் தாக்கம் துவங்கி உள்ளதால் வெள்ளை வெற்றிலையில் கலர் கிடைக்காமல், கொடியிலேயே கருப்பாக மாறி வருகிறது.
வெள்ளை நிறம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு, வெள்ளை வெற்றிலை வரத்து இல்லாத நிலை உள்ளது. வரத்து குறைந்துள்ளதால் வெள்ளை வெற்றிலையின் விலையும் உயர்ந்து வருகிறது.
சின்னமனூர் முன்னோடி வெற்றிலை சாகுபடியாளர் ரவி கூறுகையில், பனியின் தாக்கம் அதிகரித்துள்ளதால் வெள்ளை வெற்றிலை கலர் கிடைக்காமல் கருப்பு நிறமாகிறது.
வரத்து குறைவால் விலை உயர்ந்து வருகிறது. இனி பனி காலம் முடியும் வரை வெள்ளை வெற்றிலை தட்டுப்பாடு இருக்கும் என்றார்.