ADDED : செப் 01, 2025 02:42 AM

தேனி: தேனி அருகே குன்னுாரில் குழாய் உடைந்து குடிநீர் வீணாவது தொடர்கிறது. இதற்கு நிரந்தர தீர்வு காண ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொது மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
ஆண்டிபட்டி ஒன்றியத்தில் குன்னுார் ஊராட்சியில் 2 ஆயிரத்திற்கும் அதிகமான பொது மக்கள் வசிக்கின்றனர். வைகை ஆற்றில் இருந்து குடிநீர் எடுக்கப்பட்டு சுத்திகரிக்கப்பட்டு பொது மக்களுக்கு வினியோகம் ஆகிறது. ஆனால், கடந்த சில நாட்களாக குன்னுார் கிழக்குத் தெரு கருப்பசாமி கோயில் தெரு அருகே மேல்நிலைத் தொட்டியில் இருந்து பொது மக்கள் வினியோகத்திற்காக பகிர்மானம் செய்யப்படும் குடிநீர் குழாய் சேதமடைந்துள்ளது. குழாய் வழியாக வீணாகும் குடிநீர், அப்பகுதியில் குளம் போல் தேங்கியுள்ளது. குழாய்கள் சேதமடைந்து குடிநீர் வீணாகாமல் பொது மக்களுக்கு விநியோகம் செய்யும் வகையில் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொது மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.