ADDED : ஜூன் 10, 2025 02:08 AM

தேனி: பள்ளி செல்லும் நேரத்தில் போதிய பஸ் இயக்க வேண்டும் என ஆண்டிபட்டி அடைக்கம்பட்டியை சேர்ந்த பொதுமக்கள் மனு அளித்தனர்.
கலெக்டர் அலுவலகத்தில் டி.ஆர்.ஓ., மகாலட்சுமி தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. கலெக்டர் நேர்முக உதவியாளர் முத்துமாதவன், மாவட்ட வழங்கல் அலுவலர் மாரிசெல்வி முன்னிலை வகித்தனர்.
ஆண்டிபட்டி தாலுகா தேக்கம்பட்டி ஊராட்சி அடைக்கம்பட்டி சுதா, காளீஸ்வரி உள்ளிட்டோர் வழங்கிய மனுவில்,' பள்ளி மாணவர்கள் ஒக்கரைபட்டியில் உள்ள பள்ளிக்கு செல்கின்றனர்.
ஆனால், சரியான நேரத்திற்கு பஸ்கள் இயக்குவதில்லை. இதனால் 10, பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள் சிரமத்திற்கு உள்ளாகுகின்றனர்.
உரிய நேரத்தில் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என கோரியுள்ளனர்.
சொக்கன் அலை கிராம பொதுமக்கள் சார்பாக வனக்குழு தலைவர் கண்ணன் வழங்கிய மனுவில், 'கண்ணக்கரை முதல் சொக்கன் அலை வரை சிமென்ட் ரோடு அமைக்க வேண்டும், பழங்குடியினர் குடியிருப்பு பகுதிகளில் மண் அரிக்கப்பட்டு வீடுகள் இடியும் நிலை ஏற்பட்டுள்ளது. அப்பகுதியில் தடுப்புச்சுவர் அமைத்து தர வேண்டும்.
கரும்பாறை கிராமத்திற்கு குடிநீர் வழங்க இரும்பு குழாய்கள் அமைத்து தர வேண்டும்,'என கோரினர்.
பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் இலவச வீட்டு மனைபட்டா, தையல் இயந்திரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர்.