ADDED : ஜூன் 01, 2025 10:48 PM
ஆண்டிபட்டி:வைகை அணைக்கான நீர் வரத்து அதிகரித்துள்ளதால் நீர்மட்டமும் உயர்கிறது.
வைகை அணைக்கு முல்லைப் பெரியாறு, போடி கொட்டக்குடி ஆறு, வருஷநாடு மூல வைகை ஆறுகள் மூலம் நீர் வரத்து கிடைக்கும். தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழையால் வைகை அணைக்கான நீர்வரத்து கணிசமாக இருந்தது.
இந்நிலையில் தற்போது பெரியாறு அணையில் இருந்து பாசனத்திற்கு திறக்கப்பட்டுள்ள நீரில் குறிப்பிட்ட அளவு வைகை அணை வந்து சேர்கிறது. சில நாட்களாக நீர் வரத்து அதிகரித்ததால், அணை நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
மே 28 ல் 53.22 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று 55.32 அடியாக உயர்ந்தது(மொத்த உயரம் 71 அடி). கடந்த 4 நாட்களில் அணை நீர்மட்டம் 2 அடி உயர்ந்துள்ளது. நேற்று நீர் வரத்து வினாடிக்கு 1887 கன அடியாக இருந்தது. அணையில் இருந்து மதுரை, தேனி, ஆண்டிபட்டி,- சேடபட்டி குடிநீர் திட்டங்களுக்காக வினாடிக்கு 69 கன அடி நீர் வெளியேறுகிறது.