ADDED : ஜன 04, 2024 06:37 AM

தேனி: தேனி கர்னல் ஜான் பென்னி குவிக் பஸ் ஸ்டாண்டில் துாங்கியவரிடம் திருடியவரை போலீசார் கைது செய்தனர்.
இந்த பஸ் ஸ்டாண்ட் கலெக்டர் அலுவலகம் அருகே அமைந்துள்ளது. இதன் உட்புறம் உள்ள 3 பஸ் நிறுத்தங்களில் இருந்து உள்ளுர், வெளியூர்களுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. பஸ் ஸ்டாண்டில் பல இடங்களில் போதிய வெளிச்சம் இல்லை. இதனால் பயணிகள் பயந்தவாறே நடமாடும் நிலை உள்ளது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு போடி வ.உ.சி., நகர் ராஜமாணிக்கம் ஊருக்கு செல்ல காத்திருந்தார். ரத்த அழுத்தம் நோய் உள்ளதால் உறங்கி விட்டார். இந்நிலையில் நேற்று அதிகாலை எழுந்தபோது அவரது பணம், கை கடிகாரம் உள்ளிட்டவை திருடு போயிருந்தது.
அப்போது அருகில் இருந்த சிலர் திருட முயன்றவரை தாக்கினர். அந்நபரிடம் ராஜமாணிக்கத்தின் பணம், கை கடிகாரம் உள்ளிட்டவை இருந்தன. பாதிக்கப்பட்டவர் புகாரில் திருட்டில் ஈடுபட்ட தேனி பங்களாமேடு விருந்தினர் மாளிகை கிழக்குத் தெரு தங்கம் 36, போலீசாரால் கைது செய்யப்பட்டார்.