/உள்ளூர் செய்திகள்/தேனி/பெரியாறு அணையில் நீர் திறப்பு நிறுத்தம் -கம்பம் பள்ளத்தாக்கில் குடிநீருக்கு சிக்கல்பெரியாறு அணையில் நீர் திறப்பு நிறுத்தம் -கம்பம் பள்ளத்தாக்கில் குடிநீருக்கு சிக்கல்
பெரியாறு அணையில் நீர் திறப்பு நிறுத்தம் -கம்பம் பள்ளத்தாக்கில் குடிநீருக்கு சிக்கல்
பெரியாறு அணையில் நீர் திறப்பு நிறுத்தம் -கம்பம் பள்ளத்தாக்கில் குடிநீருக்கு சிக்கல்
பெரியாறு அணையில் நீர் திறப்பு நிறுத்தம் -கம்பம் பள்ளத்தாக்கில் குடிநீருக்கு சிக்கல்
ADDED : ஜன 11, 2024 04:03 AM
கூடலுார் : முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழகப் பகுதிக்கு திறக்கப்பட்டிருந்த நீர் முழுமையாக நிறுத்தப்பட்டது. இதனால் தேனிமாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கில் குடிநீருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. நீர்மட்டம் 138 அடியை எட்டியதால் கேரளாவுக்கு இரண்டாம் கட்ட தகவல் தமிழக நீர் வளத்துறையினரால் வழங்கப்பட்டுள்ளது.
முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் நேற்று காலை 6:00 மணி நிலவரப்படி 138.10 அடியை எட்டியது (மொத்த உயரம் 152 அடி). பெரியாறில் 15.8 மி.மீ., தேக்கடியில் 27.8 மி.மீ., மழை பதிவானது.
அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1701 கன அடியாக இருந்தது. நீர் இருப்பு 6647 மில்லியன் கன அடியாகும். நீர்ப்பிடிப்பு பகுதியில் பகல் நேரத்தில் மேகமூட்டத்துடனும் இரவு நேரத்தில் மழை பெய்து வருகிறது.
நிறுத்தம்: வைகை அணையில் நீர்மட்டம் 71 அடியாகி முழு கொள்ளளவை எட்டியதாலும், தேனி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்து நீர்வரத்து அதிகரித்ததாலும் முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தமிழகப் பகுதிக்கு திறக்கப்பட்டிருந்த நீர் முழுமையாக நிறுத்தப்பட்டது.
சிக்கல்: லோயர்கேம்ப் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் கம்பம் பள்ளத்தாக்கில் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது.
தமிழகப் பகுதிக்கு திறக்கப்பட்டிருந்த 511 கனஅடி நீர் ஜன. 8-ல் 105 கன அடியாக குறைக்கப்பட்டது. இதனால் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று காலையில் இருந்து நீர் முழுமையாக நிறுத்தப்பட்டதால் குடிநீருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இரண்டாம் கட்ட தகவல்
அணையின் நீர்மட்டம் 138 அடியை எட்டியதால் இரண்டாம் கட்ட தகவலை இரண்டாவது முறையாக இடுக்கி மாவட்ட நிர்வாகத்திற்கு தமிழக நீர்வளத் துறையினர் வழங்கியுள்ளனர். ஏற்கனவே 2023 டிசம்பர் 18ல் நீர்மட்டம் 138 அடியானபோது முதன்முறையாக 2ம் கட்ட தகவல் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஏமாற்றம்: லோயர்கேம்ப் முல்லைப் பெரியாற்றிலிருந்து டிச.,19ல் 18ம் கால்வாய்க்கு தண்ணீர் திறக்கப்பட்டது. அத்தண்ணீர் கோம்பையை கடப்பதற்கு முன் டிச.,31ல் லோயர்கேம்ப் அருகே கரைப்பகுதி உடைப்பு ஏற்பட்டதால் நீர் நிறுத்தப்பட்டது. கரைப்பகுதி சீரமைக்கப்பட்டு 2 தினங்களுக்கு முன் மீண்டும் 50 கன அடி நீர் திறக்கப்பட்டது. தற்போது பெரியாறு அணையில் தண்ணீர் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில் 18ம் கால்வாயில் தண்ணீர் செல்லாததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.