Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/மாவட்டத்தில் சிறு,குறு தொழில்கள் துவங்கும் பணிகளில் தொய்வு : பொது மேலாளர் பணியிடம் 9 மாதங்களாக காலியானதால் சிரமம்

மாவட்டத்தில் சிறு,குறு தொழில்கள் துவங்கும் பணிகளில் தொய்வு : பொது மேலாளர் பணியிடம் 9 மாதங்களாக காலியானதால் சிரமம்

மாவட்டத்தில் சிறு,குறு தொழில்கள் துவங்கும் பணிகளில் தொய்வு : பொது மேலாளர் பணியிடம் 9 மாதங்களாக காலியானதால் சிரமம்

மாவட்டத்தில் சிறு,குறு தொழில்கள் துவங்கும் பணிகளில் தொய்வு : பொது மேலாளர் பணியிடம் 9 மாதங்களாக காலியானதால் சிரமம்

UPDATED : ஜூன் 24, 2025 07:57 AMADDED : ஜூன் 24, 2025 03:22 AM


Google News
Latest Tamil News
தேனி: மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் பணியிடம் 9 மாதங்களாக நிரப்பப்படாததால் சிறு,குறு தொழில் துவங்குவதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே தொழில் செய்துவரும் உரிமையாளர்கள் விரிவாக்கப் பணிகளை மேற்கொள்வதில் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.

இம்மாவட்டம் 80 சதவிகிதம் விவசாயத்தை நம்பி உள்ளது. இருப்பினும் மாவட்ட தொழில் மையம் மூலம் புதிய தொழில்முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத்திட்டம் (நீட்ஸ்), வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம், பிரதம மந்திரியின் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் மூலம் பல்வேறு தொழில்முனைவோர்கள் உருவாக்கப்பட்டு உள்ளனர். இதுதவிர ஆண்டிபட்டி பகுதியில் முருங்கைப் பவுடர் தயாரித்தல், சின்னமனுாரில் ஜி9 வாழை ஏற்றுமதி நிறுவனங்கள் உள்ளன. சிறு, குறு தொழில்களாக உள்ள மதிப்புக்கூட்டப்பட்ட வாழை நார் பொருட்கள் உற்பத்தி, காபிக்கொட்டை வறுத்தல், அரைத்தல், ஏலக்காய் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் தயாரித்தல், முந்திரி எண்ணெய் உற்பத்தி, இலவம் பஞ்சில் மெத்தை, தலையணை தயாரித்தல், முகக்கவசம் தயாரிப்பு, பருத்தி நுால் மற்றும் விசைத்தறி, பருத்தி காடா துணி தயாரித்தல், காட்டன் சேலைகள் மற்றும் வேஷ்டிகள் தயாரிப்பு, மலேரியா நோய் எதிர்ப்பு மருந்துகள், வைரஸ் தடுப்பு மருந்துகள் தயாரிப்பு, நாப்கின் தயாரிப்பு நிறுவனங்கள் உட்பட 95 சிறு, குறு தொழில்கள் நடந்து வந்தன.

பொது மேலாளர் பணியிடம் காலி:

தேனி மாவட்ட தொழில் மைய பொது மேலாளராக பாலசுப்பிரமணியம் பணியாற்றினார். அவரை 9 மாதங்களுக்கு முன் விருதுநகர் மாவட்டத்திற்கு மாற்றப்பட்டார். அவரது பணிகளை கூடுதல் பொறுப்பாக மதுரை மாவட்ட தொழில் மையத்தின் பொது மேலாளர் கணேசன் பார்த்து வந்தார். கூடுதல் பணியாக கவனிப்பதால் மதுரை மாவட்ட பணிகளை கவனித்துவிட்டு, இங்கு வந்து செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. புதிய தொழில் முனைவோர்களுக்கு ஊக்கம் அளித்து, தொழில்துவங்குவதற்கான நிதியுதவி, தொழில் துவங்குவதற்கான ஆலோசனைகள் வழங்குகளில் சுணக்கம் ஏற்பட்டது. இதனால் சிறு தொழில் துவங்க விரும்பும் இளம் தொழில்முனைவோருக்கு உரிய வழிகாட்டுதல் இன்றி தவித்து வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் காலியாக உள்ள பொது மேலாளர் பணியிடத்தை உடனடியாக நிரப்பிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொழில் முனைவோர் கோரியுள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us