ADDED : ஜன 05, 2024 05:21 AM
கடமலைக்குண்டு : மயிலாடும்பாறை அருகே செங்குளம் கார்த்திக் மகன் பரத் 13, மயிலாடும்பாறை தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார். இதே ஊரைச் சேர்ந்த பால்பாண்டியன் மகன் சிவனேஸ்வரன் 14, இங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 8ம் வகுப்பு படிக்கிறார். நண்பர்களான இருவரும் இரு நாட்களுக்கு முன் வழக்கம்போல் பள்ளிக்கு காலையில் வீட்டிலிருந்து சென்றனர்.
இரவு வரை வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியாமல் பெற்றோர்கள் மயிலாடும்பாறை போலீசில் புகார் செய்தனர். இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் நல்லூர் அருகே மேம்பாலத்தில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த இரு சிறுவர்களையும் அப்பகுதி போலீசார் சந்தேகத்தின் பேரில் விசாரித்துள்ளனர்.
தங்கள் தேனியை சேர்ந்தவர்கள் என்றும் இப்பகுதியில் நடக்கும் கபடி போட்டியை பார்க்க வந்துள்ளதாகவும் சிறுவர்கள் தெரிவித்தனர். அவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று, அங்கிருந்து தேனி மாவட்ட போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து மயிலாடும்பாறை போலீசார் நாமக்கல் சென்று இரு மாணவர்களையும் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர்.