கொலை மிரட்டல்: வாலிபர் கைது
போடி: வினோபாஜி காலனி கருப்பசாமி கோயில் தெரு ஒண்டிவீரன் 75. மரக்கடை காவலாளி. இவர் நடந்து செல்லும் போது சிவன் கோயில் தெருவை சேர்ந்த அருண்குமார் 25, பின்பக்கமாக மோதினார். ஒண்டிவீரன் சத்தம் போட்டு, தட்டிக்கேட்டார். ஆத்திரம் அடைந்த அருண்குமார், ஒண்டிவீரனை தகாத வார்த்தையால் பேசி, மறைத்து வைத்து இருந்த கத்தியை எடுத்து இடது காது அருகே கிழித்து காயம் ஏற்படுத்தி கொலை மிரட்டல் விடுத்தார். போடி தாலுகா போலீசார் அருண்குமாரை கைது செய்தனர்.
எஸ்.பி., அலுவலகத்தில் தற்கொலை முயற்சி
தேனி: சஞ்சய்காந்தி 7 வது தெரு பட்டதாரி இளைஞர் அரவிந்தன் 28. இவர் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி, ஒரு நபர் ரூ.5.65 லட்சம் பணம் மோசடி செய்ததாக தேனி எஸ்.பி., அலுவலகத்தில் மனு அளித்தார். பின் அலுவலகம் முன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். அப்பகுதியில் இருந்தவர்கள் அவரை மீட்டனர். தேனி வி.ஏ.ஓ., ஜீவா புகாரில், அரவிந்தன் மீது தேனி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
விபத்தில் கொத்தனார் பலி
தேனி: பத்தரகாளிபுரம் வைரமுத்து 45, ஈஸ்வரன் 54. இருவரும் கொத்தனார் வேலை செய்து வந்தனர். இந்நிலையில் டூவீலரில் காக்கிவாடன்பட்டி பிரிவு அருகில் வந்த போது அடையாளம் தெரியாத ஆட்டோ, டூவீலர் மீது மோதி நிற்காமல் சென்றது. அங்கிருந்தவர்கள் காயமடைந்தவர்களை தேனி மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தனர். சிகிச்சை பலனின்றி ஈஸ்வரன் இறந்தார். வைரமுத்து புகாரில் பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.