ADDED : பிப் 11, 2024 01:41 AM
கம்பம்: ஸ்ரீவில்லிப்புத்தூர் - மேகமலை புலிகள் காப்பகத்தில் குறிப்பிட்ட சில பகுதிகளில் ட்ரோன்கள் மூலம் கண்காணிக்க திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வன உயிரினங்கள் பாதுகாப்பு, வேட்டையர்கள் நடமாட்டத்தை அறிந்து தடுக்க உதவும்.
புலிகள் எண்ணிக்கை குறைவதை தடுக்கவும், புலிகள் பாதுகாக்கப்படவும் மத்திய வன அமைச்சகம் ஸ்ரீவில்லிப்புத்தூர் - மேகமலை புலிகள் காப்பகத்தை 2021 ல் உருவாக்கியது. இது இந்தியாவின் 51 வது புலிகள் காப்பகமாகவும், தமிழகத்தின் 5 வது புலிகள் காப்பகமாகவும், ஸ்ரீவில்லிப்புத்தூர் சாம்பல் நிற அணில் சரணாலயத்தையும், மேகமலை வன உயிரின சரணாலயத்தையும் இணைத்து இந்த காப்பகம் அறிவிக்கப்பட்டது.
இதன் பரப்பு 1,01, 657 எக்டேர் ஆகும். ஆனைமலை, களக்காடு - முண்டன்துறை, பெரியார் புலிகள் காப்பகங்கள் ஒரே வரிசையில் வருகிறது.
புலிகளின் வாழ்விடம் மற்றும் அதன் நடமாட்டத்திற்கு இது பெரிதும் உதவும். ஆனால் இன்றைக்கும் வன உயிரினங்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. வனத்துறையினர் தீவிர முயற்சிகள் செய்து பாதுகாத்து வருகின்றனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன் புலியின் எலும்பு கூடு ஒன்று சுருளிப் பட்டிக்கு கிழக்கு யானை கெஜம் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. ஆய்வக பரிசோதனைக்காக ஐதராபாத் ஆய்வத்திற்கு அனுப்பப்பட்டது.
எனவே, புலிகளின் நடமாட்டம், அவற்றின் எண்ணிக்கை, அவற்றின் பாதுகாப்பு பிற வன உயிரினங்களின் நடமாட்டம், குறிப்பாக வேட்டையர்கள் நடமாட்டம் உள்ளதா என்பன போன்ற தகவல்களை தெரிந்து கொள்ள 'ட்ரோன்'களை பயன்படுத்த வனத்துறை முடிவு செய்துள்ளது.
கோவையில் ரயில் பாதையில் யானைகள் பலியாவதை தடுக்க பேட்டரியால் இயங்கும் ட்ரோன்கள் பயன்படுத்தப்பட உள்ளது. அதையே புலிகள் காப்பக பகுதிகளில் பயன்படுத்த வனத்துறை திட்டமிட்டுள்ளது. இந்த விஷயத்தில்
தமிழக அரசின் அன் மேன்ட் ஏரியல் வெகிகிள் கார்ப்பரேசன் (Tamil Nadu Unmanned vehicle Corporation) வனத்துறைக்கு உதவுகிறது. இந்த ட்ரோனில் சக்தி வாய்ந்த கேமராக்கள் பொறுத்தப்படுகிறது.
இதன் மூலம் 24 மணி நேரமும் புலிகளின் நடமாட்டம் மற்றும் அதன் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என தெரிகிறது.