Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/டாக்டர் பற்றாக்குறையால் ஆண்டிபட்டியில் ஆப்பரேஷன் நிறுத்தம்

டாக்டர் பற்றாக்குறையால் ஆண்டிபட்டியில் ஆப்பரேஷன் நிறுத்தம்

டாக்டர் பற்றாக்குறையால் ஆண்டிபட்டியில் ஆப்பரேஷன் நிறுத்தம்

டாக்டர் பற்றாக்குறையால் ஆண்டிபட்டியில் ஆப்பரேஷன் நிறுத்தம்

UPDATED : ஜூன் 01, 2025 07:01 AMADDED : ஜூன் 01, 2025 12:27 AM


Google News
Latest Tamil News
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அரசு மருத்துவமனையில் டாக்டர்கள், பணியாளர்கள் பற்றாக்குறைவால் நோயாளிகள் மருத்துவ சேவை கிடைக்காமல் தவிக்கின்றனர்.

ஆண்டிபட்டி அரசு மருத்துவமனைக்கு தினமும் 500க்கும் மேற்பட்ட புற நோயாளிகள் சிகிச்சைக்கு வருகின்றனர். உள் நோயாளிகள் பிரிவில் 54 படுக்கை வசதிகள் உள்ளது. 40க்கும் மேற்பட்ட உள் நோயாளிகள் சிகிச்சையில் உள்ளனர். ஆண்டிபட்டி பேரூராட்சி, ஒன்றியத்திற்கு உட்பட்ட 100க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஆண்டிபட்டி அரசு மருத்துவமனையை பயன்படுத்துகின்றனர். 24 மணி நேர மருத்துவமனை ஆண்டிபட்டி மக்களுக்கு வரப்பிரசாதமாக உள்ளது. ஆனால் அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப டாக்டர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் இல்லை. 8 டாக்டர்கள் இருக்க வேண்டியதில் 5 பேர் மட்டுமே உள்ளனர். போதிய செவிலியர்கள் இல்லை. எக்ஸ்ரே, ஸ்கேன் டெக்னீசியன்கள் மாற்றுப்பணியாக வந்து செல்கின்றனர். வெள்ளி, செவ்வாய் மட்டுமே ஸ்கேன் சென்டர் செயல்படுகிறது. மயக்கவியல் டாக்டர் இல்லாததால் மருத்துவமனையில் ஆபரேஷன் நடைபெறுவது இல்லை. அரசு மருத்துவமனையில் சிறந்த சிகிச்சை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வரும் நோயாளிகளுக்கு ஏமாற்றம் ஏற்படுகிறது. பொதுமக்கள் கூறியதாவது:

ஊசி போடுவது நிறுத்தம்


சென்றாயப்பெருமாள், ஆண்டிபட்டி: புற நோயாளிகள் பிரிவில் அதிகமானோர் சிகிச்சைக்கு வருவதால் நோயாளிகள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்கும் நிலை உள்ளது. முதியோர், குழந்தைகள் பாதிக்கின்றனர். புற நோயாளிகள் பிரிவில் கடந்த சில மாதங்களாக மருந்து மாத்திரை மட்டுமே வழங்குகின்றனர். ஊசி போடுவதில்லை. இரவு பணியில் டாக்டர்கள் இல்லை. துப்புரவு, தூய்மை பணியாளர்கள் இல்லை. இதனால் வார்டுகளில் சுகாதாரம் பாதித்துள்ளது. மழைக்காலத்தில் மருத்துவமனை வளாகத்தில் மழை நீர் அதிகம் தேங்கி பாதிப்பு ஏற்படுகிறது. மழைநீர் வடிந்து செல்ல வழியில்லை.

தாமதமாக துவங்கும் புறநோயாளிகள் பிரிவு


கோட்டைமணி, சக்கம்பட்டி: சமீபத்தில் நாய் கடியால் பாதிப்படைந்த நண்பரை சிகிச்சைக்காக காலை 7:00 மணிக்கு ஆண்டிபட்டி அரசு மருத்துவமனைக்கு கூட்டி சென்றேன். அவசர சிகிச்சை பிரிவில் இருந்தவர்கள் புற நோயாளிகள் பிரிவிற்கு செல்லுமாறு கூறுகின்றனர். காலை 8:00 மணிக்கு பின்பே துவங்குகிறது. மீண்டும் அவசர சிகிச்சை பிரிவுக்கு சென்ற போது கடிபட்ட இடத்தில் சோப்பு போட்டு கழுவி வர திருப்பி அனுப்பினர். சோப்பு போட்டு கழுவி வந்த பின்பு தான் தடுப்பூசி போட்டனர். நோயாளிக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து யாரிடமும் புகார் தெரிவிக்க முடியவில்லை. கூட்டம் அதிகமானால் டாக்டர்கள், செவிலியர்கள் நோயாளிகளை வசை பாடுவது தொடர்கிறது. சிகிச்சைக்கு வரும் நோயாளிக்கு நோயின் தன்மை குறித்து பரிசோதனை செய்யாமலேயே மாத்திரை கொடுத்து அனுப்பி விடுகின்றனர். தனியார் மருத்துவமனையில் பணம் செலவழிக்க முடியாதவர்களே அரசு மருத்துவமனைக்கு வருகின்றனர். ஆனால் அவர்கள் மன உளைச்சலுக்கு உட்படுத்தப்படுகின்றனர். மருத்துவமனையில் போதிய டாக்டர்கள், செவிலியர்கள் பணியில் இருந்தால் நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை கிடைக்கும்.

விடுப்பில் நிலைய அலுவலர்


டாக்டர் ஒருவர் கூறியதாவது: சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு நோயின் தன்மைக்கு ஏற்ப ஊசி போடப்படுகிறது. சில நோயாளிகள் தொடர்ந்து ஊசி போடுமாறு டாக்டரை நிர்ப்பந்தப்படுத்துகின்றனர். தேவையான நோயாளிகளுக்கு ஊசி போடப்படும். மருத்துவமனை நிலைய அலுவலர் தற்போது மருத்துவ விடுமுறையில் உள்ளார். அவர் வந்த பின்பு மற்ற தகவல்களை தெரிந்து கொள்ளலாம் என்றார்.

பணியிடங்களை நிரப்பிடவும் கண்காணிப்பு தேவை தீர்வு


அரசு மருத்துவமனையில் மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து தேவையான பணியிடங்களை நிரப்ப வேண்டும். 24 மணி நேரமும் செயல்படும் மருத்துவமனையில் நோயாளிகளுக்கு முறையான சேவை வழங்கப்படுகிறதா என்பது குறித்து மருத்துவ அதிகாரிகளின் கண்காணிப்பு அவசியம். மருத்துவமனையில் நோயாளிகளுக்கு புகார் பெட்டி அமைத்து குறைகளை சரி செய்ய வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us