ADDED : ஜன 05, 2024 04:08 AM
கம்பம் : மேகமலையில் நேற்று முன்தினம் இரவு மழை வெளுத்து வாங்கியதால் சண்முகநதி அணைக்கு மீண்டும் நீர் வரத்து ஏற்பட்டது.
மேகமலையில் தென்மேற்கு பருவமழையை விட வடகிழக்கு பருவமழை காலத்தில் கூடுதல் மழை கிடைக்கும். ஒவ்வொரு ஆண்டும் அக்டோபரில் கிடைக்க வேண்டிய மழை, இந்தாண்டு நவம்பரில் கிடைத்தது.
ஒரு வாரத்திற்கும் மேலாக மழை இல்லை. நேற்று முன்தினம் இரவு திடீரென கனமழை பெய்ய துவங்கியது.
இதனால் இங்குள்ள ஹைவேவிஸ், மணலாறு, வெண்ணியாறு, இரவங்கலாறு அணை பகுதிகளில் நீர் வரத்து அதிகரித்தது. இந்நிலையில் ஹைவேவிஸ் பகுதியில் பத்து கூடு பகுதியில் பலத்த மழை பெய்ததால், நேற்று காலை சண்முகா நதி அணைக்கு நீர் வரத்து 7 கன அடியாக இருந்தது.
கடந்த டிச.8ல் சண்முகா நதி அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
விநாடிக்கு 14.47 கனஅடி திறக்கப்படுகிறது. அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் தற்போது அணையின் நீர் மட்டம் 49.40 அடியாக உள்ளது.
25 நாட்களில் 3 அடியே குறைந்துள்ளது. தற்போது அணைக்கு விநாடிக்கு 7 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருப்பதால், மீண்டும் அணை தனது முழு கொள்ளளவான 52.5 அடியை எட்ட வாய்ப்புள்ளதாக பொதுப்பணித்துறையினர் கூறுகின்றனர்.