ADDED : ஜன 03, 2024 10:42 PM
ஆண்டிபட்டி:தேனி மாவட்டம் வைகை அணையில் இருந்து ஆற்றின் வழியாக திறக்கப்பட்ட நீர் நிறுத்தப்பட்டதால் அணை நீர்மட்டம் மீண்டும் உயர்கிறது.
அணைக்கு பெரியாறு, தேனி முல்லை ஆறு, போடி கொட்டக்குடி ஆறு, வருஷநாடு மூல வைகை ஆறு மூலம் நீர் வரத்து உள்ளது. நீர்ப்பிடிப்பில் பெய்த மழையால் அணை நீர்மட்டம் கடந்தாண்டு நவ., 9 ல் உச்ச அளவாக 70.51 அடி வரை உயர்ந்தது (அணை மொத்த உயரம் 71 அடி).
இந்நிலையில் இரு மாதங்களாக மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களின் பாசனத்திற்காக அணையில் இருந்து தொடர்ந்து நீர் வெளியேறியதால் நீர்மட்டம் டிச.,8ல் 62.73 அடியாக குறைந்தது. அணை நீர்ப்பிடிப்பில் பெய்த பலத்த மழையால் நீர்மட்டம் ஓரிரு நாட்களில் வேகமாக உயர்ந்து கடந்தாண்டு டிசம்பர் 20ல் 69.60 அடியானது. இந்நிலையில் நீர்வரத்தை விட வெளியேற்றம் அதிகம் இருந்ததால் டிச.,31ல் நீர்மட்டம் 69.09 அடியாக குறைந்தது. ஜனவரி முதல் நாளில் ஆற்றின் வழியாக திறக்கப்பட்ட நீர் நிறுத்தப்பட்டது.
தற்போது அணையில் இருந்து பெரியாறு, திருமங்கலம் பிரதான கால்வாய்களின் ஒரு போக பாசன நிலங்களுக்காக கால்வாய் வழியாக வினாடிக்கு 1330 கன அடி, 58ம் கால்வாய் வழியாக வினாடிக்கு 100 கன அடி, மதுரை, தேனி, ஆண்டிபட்டி -- சேடப்பட்டி குடிநீர் திட்டங்களுக்காக வினாடிக்கு 69 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. தற்போது நீர் வெளியேற்றத்தை விட வரத்து அதிகம் இருப்பதால் ஜன.,1ல் 69.09 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று 69.52 அடியாக உயர்ந்தது. தற்போதுள்ள சூழலில் அணை நீர்மட்டத்தை 71 அடி வரை உயர்த்த வாய்ப்புள்ளதாக நீர்ப்பாசனத் துறையினர் தெரிவித்தனர்.