/உள்ளூர் செய்திகள்/தேனி/சீதோஷ்ண நிலை மாற்றத்தால் மா மரங்களில் மகசூல் பாதிப்பு! வருவாய் இழப்பால் விவசாயிகள் புலம்பல்சீதோஷ்ண நிலை மாற்றத்தால் மா மரங்களில் மகசூல் பாதிப்பு! வருவாய் இழப்பால் விவசாயிகள் புலம்பல்
சீதோஷ்ண நிலை மாற்றத்தால் மா மரங்களில் மகசூல் பாதிப்பு! வருவாய் இழப்பால் விவசாயிகள் புலம்பல்
சீதோஷ்ண நிலை மாற்றத்தால் மா மரங்களில் மகசூல் பாதிப்பு! வருவாய் இழப்பால் விவசாயிகள் புலம்பல்
சீதோஷ்ண நிலை மாற்றத்தால் மா மரங்களில் மகசூல் பாதிப்பு! வருவாய் இழப்பால் விவசாயிகள் புலம்பல்
ADDED : ஜூன் 11, 2024 07:17 AM
கம்பம் : தொடர் மழை, கடும் வெப்பம் போன்ற சீதோஷ்ண நிலை மாற்றத்தால் மா மரங்களில் மகசூல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகளுக்கு பல லட்சம் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் 20 ஆயிரம் ஏக்கரில் மா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மிக அதிகமாக பெரியகுளம், போடி, கம்பம் தாலுகாக்களில் உள்ளது. அதிகளவில் மானாவாரி நிலங்களிலும், கணிசமான அளவு ஆற்று பாசன பகுதியில் இச் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மா சாகுபடி வறட்சியை தாங்கி வளரக் கூடிய பயிராகும். பெரிய அளவில் உரம், பூச்சி மருந்துகள் செலவு செய்ய தேவையில்லை. அதே சமயம் நல்ல வருவாய் தரக்கூடிய பயிராகும். இப் பகுதியில் காசா லட்டு, கல்லாமை, செந்தூரம், அல்போன்சா, கிரேப்ஸ் உள்ளிட்ட ரகங்கள் அதிகம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மா மரங்களில் டிச., ஜன.,யில் பூ பூத்து காய் பிடித்து, அறுவடை ஏப்ரலில் துவங்கி ஜுன் வரை நீடிக்கும்.
ஆனால் இந்தாண்டு ஜனவரியில் பூ பூத்த நாட்களில் மழை பெய்து மகரந்த சேர்க்கை நடக்காமல் பூக்கள் கொட்டியது. இதனால் அடுத்த சில நாட்களில் மரங்களில் கொழுந்து இலைகள் தளிர்தது. எனவே தற்போது 10 சதவீத காய்ப்புதான் ஆங்காங்கே உள்ளது. தோப்புகளில் வெறும் இலைகளாகவே காணமுடிகிறது. இதனால் இந்தாண்டு மா மகசூல் பாதிக்கப்பட்டுள்ளது. பெரியகுளம், போடி , கம்பம், ஆண்டிபட்டி வட்டாரங்களில் உள்ள மா சாகுபடியாளர்கள் கடும் பாதிப்பிற்கு உள்ளாகி இருக்கின்றனர். மாங்காய் விளைச்சல் இல்லாததால் விலை உயர்ந்துள்ளது. விளைச்சல் அதிகம் இருந்தால் ஒரு டன் ரூ.6 ஆயிரத்திற்கு விற்கும் கல்லாமை தற்போது டன் ரூ.18 ஆயிரம் வரை உயர்ந்துள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர்.
இது குறித்து கம்பம் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் பாண்டியன் ராணா கூறுகையில், கடந்த ஜனவரி முதல் வாரம் வரை மழை பெய்தது. அதற்கு பின் கடும் வெப்பம் நிலவியது. இதனால் மா மரங்களில் பூ பூக்கவில்லை. சீசன் மாறியது. இதனால் மகசூல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது, என்றார்.
மா சாகுபடியாளர் ராஜேந்திரன் கூறுகையில், தேவையான அளவு பூச்சி கொல்லி மருந்து தெளித்தோம். ஜனவரியில் பெய்த மழையால் பூக்கள் கொட்டி விட்டது. பொதுவாக ஏப்ரலில் காய் பறிப்பு ஆரம்பித்து ஜுன் மாதம் நிறைவடையும், தற்போது ஜுன் இரண்டாவது வாரமாகியும் மகசூல் இல்லை. ஒவ்வொரு விவசாயிக்கும் லட்சக்கணக்கில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆற்றுப் பாசனம் செய்யும் ஒரு சில இடங்களில் காய்ப்பு உள்ளது. ஆனால் 90 சதவீதம் மானாவாரியில் தான் உள்ளது என்றார்.