ADDED : ஜன 01, 2024 06:06 AM
தேனி; மாவட்ட கால்பந்தாட்ட கழகம் சார்பில், மாவட்ட அளவிலான கால்பந்துப் போட்டி மாவட்ட விளையாட்டு அரங்கில் நேற்று முன்தினம் துவங்கியது. போட்டி 14 வயதிற்கு உட்பட்ட பிரிவு, பொதுப்பிரிவு என 2 பிரிவுகளில் நடந்தது.
ஆண்டிப்பட்டி, போடி, பெரியகுளம், தேனி, கம்பம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கால்பந்தாட்ட அணியினர் போட்டிகளில் பங்கேற்றனர்.14 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் 12 அணிகளும், பொதுப் பிரிவில் 15 அணிகளும் பங்கேற்றன. லீக் போட்டிகள், கால் இறுதி போட்டிகள் நேற்று முன்தினம் நடந்தது. அரையிறுதி, இறுதிப் போட்டிகள் நேற்று நடந்தன. இப்போட்டிகளை சங்கத் தலைவர் கதிரேசன், செயலாளர் மனோகரன், நடுவர் சுதர்சன் ஒருங்கிணைத்தனர்.
14 வயதிற்கு உட்பட்டோர் பிரிவுக்கான இறுதிப்போட்டியில் தேனி டிராகன் அணி, ரோசனப்பட்டி ஆர்.எப்.சி., அணிகள் மோதின. இதில் 3:0 என்ற கோல் கணக்கில் டிராகன் அணி வெற்றி பெற்றது.
பொதுப் பிரிவில் தேனி எஸ்.டி.எம்.எம்., கால்பந்து அணி, பீலே கால்பந்து அணிகள் மோதின. இதில் 4:1 என்ற கோல் கணக்கில் எஸ்.டி.எம்.எம்., அணி வெற்றி பெற்றது.