Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/ முடிந்த பணிகளுக்கு பணம் கிடைக்காமல் ஒப்பந்ததாரர்கள் தவிப்பு

முடிந்த பணிகளுக்கு பணம் கிடைக்காமல் ஒப்பந்ததாரர்கள் தவிப்பு

முடிந்த பணிகளுக்கு பணம் கிடைக்காமல் ஒப்பந்ததாரர்கள் தவிப்பு

முடிந்த பணிகளுக்கு பணம் கிடைக்காமல் ஒப்பந்ததாரர்கள் தவிப்பு

ADDED : ஜூன் 13, 2025 03:11 AM


Google News
ஆண்டிபட்டி: தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் கட்டுமான பணிகளுக்கான தளவாடப் பொருட்கள் வினியோகம் செய்த ஒப்பந்ததாரர்களுக்கு பணிகள் முடிந்து ஓராண்டாகியும் பணம் வழங்கவில்லை. மாவட்டம் முழுவதும் ரூ.10 கோடி நிலுவை உள்ளதால் அடுத்தடுத்த பணிகளை தொடர முடியாமல் தவிக்கின்றனர்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் ஊராட்சிகளில் சிமென்ட் ரோடு, பேவர்பிளாக், கழிவுநீர் வடிகால், சிறு பாலம், அங்கன்வாடி மைய கட்டடம், நூலகம் கட்டடம் போன்ற கட்டுமான பணிகள் தேர்வு செய்து மேற்கொள்கின்றனர். இப் பணிகளுக்கு தேவையான சிமென்ட், கம்பி, மணல், ஜல்லி உட்பட கட்டுமானத்திற்கு தேவையான உபகரணங்கள் வழங்க ஒப்பந்ததாரர்கள் தேர்வு செய்து பொருட்கள் சப்ளை செய்து பணிகள் முடிக்கப்படும்.

கடந்த ஓராண்டில் ஆண்டிபட்டி ஒன்றியத்திற்குட்பட்ட 30 ஊராட்சிகளில் குறிப்பிட்ட சில ஊராட்சிகளில் மட்டும் இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அங்கு தேர்வு செய்யப்பட்ட பணிகள் முடிந்து ஓராண்டாகியும் ஒப்பந்ததாரர்கள் செலவு செய்த பணம் அரசு இன்னும் வழங்கவில்லை. பணம் எப்போது கிடைக்கும் என்ற தவிப்பில் ஒப்பந்ததாரர்கள் ஒன்றிய அலுவலகத்திற்கு தினமும் வந்து செல்கின்றனர்.

ஒப்பந்ததாரர்கள் கூறியதாவது: தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் சிறு ஒப்பந்ததாரர்களே அதிகம் உள்ளனர். பணிகள் செய்வதற்கு ஒப்பந்தம் கிடைத்தால் போதும், தொடர்ந்து பணிகளை மேற்கொள்ளலாம் என்ற நோக்கத்தில் தங்கள் சொந்த பணத்தை முதலீடு செய்து பணிகளை முடித்துள்ளனர்.

ஒவ்வொரு ஒப்பந்ததாரர்களுக்கு ரூ.5 லட்சம் முதல் 20 லட்சம் வரையில் நிலுவை உள்ளது. கடந்த ஓராண்டாக இதற்கான வட்டியை கணக்கிட்டால் ஒப்பந்ததாரர்களுக்கு நஷ்டம்தான் ஏற்படுகிறது. மாவட்டம் முழுவதும் பெரும்பாலான ஊராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு முடிந்த பணிகளுக்கு ரூ.10 கோடி வரை கடந்த ஓராண்டாக நிலுவையில் உள்ளது.

இந்த பணம் கிடைப்பதற்கான நடவடிக்கையில் ஒன்றிய அதிகாரிகள் ஈடுபட வில்லை. அரசு இத்திட்டத்திற்கான பணம் அனுப்பினால் மட்டுமே வழங்க இயலும் என்று தெரிவிக்கின்றனர். பணம் நிலுவையால் மற்ற பணிகளிலும் பாதிப்பு ஏற்படுகிறது.

மாவட்ட நிர்வாகம் மூலம் ஒப்பந்ததாரர்களுக்கு பணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us