ADDED : பிப் 12, 2024 05:51 AM
தேவதானப்பட்டி: மது போதையில் பொது இடத்தில் அவதூறாக பேசியவர்களுக்கு அறிவுரை கூறியவரை அரிவாளால் வெட்டி கொலை முயற்சியில் ஈடுபட்ட 6 பேரை தேவதானப்பட்டி போலீசார் தேடி வருகின்றனர்.
தேவதானப்பட்டி தெற்கு தெரு பழைய இரும்பு கடை வியாபாரி பொன்ராம் 48. இவர் கடையை அடைத்துவிட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அதே தெரு மாரிமுத்து, அவரது நண்பர்கள் தங்கப்பாண்டி, வசந்த், அழகு விஜய், காமராஜ், காசி ஆகிய 6 பேர் மது குடித்துவிட்டு சாவடி அருகே அவதூறாக பேசிக் கொண்டிருந்தனர். அவ்வழியாக சென்ற பொன்ராம் ஏன் இப்படி நடந்து கொள்கிறீர்கள் என அறிவுறுத்தி, வீட்டிற்கு கிளம்பியவரை 6 பேர் வழிமறித்தனர். பின் அழகு விஜய், காமராஜ், காசி ஆகியோர் பொன்ராமை பிடித்துக் கொள்ள மாரிமுத்து, தங்கப்பாண்டி, வசந்த் ஆகியோர் அரிவாளால் வெட்டியும், கத்தியால் குத்தி, கம்பியால் அடித்து காயப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்தனர். இதில் படுகாயம் அடைந்த பொன்ராம் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தேவதானப்பட்டி போலீஸ் எஸ்.ஐ., தேவராஜ், மாரிமுத்து உட்பட 6 பேர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றார்.