Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/பழமையான சிவன் கோயில் சிற்பங்கள்: வருஷநாடு அருகே கண்டுபிடிப்பு

பழமையான சிவன் கோயில் சிற்பங்கள்: வருஷநாடு அருகே கண்டுபிடிப்பு

பழமையான சிவன் கோயில் சிற்பங்கள்: வருஷநாடு அருகே கண்டுபிடிப்பு

பழமையான சிவன் கோயில் சிற்பங்கள்: வருஷநாடு அருகே கண்டுபிடிப்பு

ADDED : பிப் 06, 2024 03:17 AM


Google News
Latest Tamil News
கடமலைக்குண்டு: தேனி மாவட்டம், வருஷநாடு அருகே கி.பி., 13ம் நூற்றாண்டை சேர்ந்த சிவலிங்கம், நான்கு பழமையான சிற்பங்கள், 17ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு ஆகியவற்றை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

கடமலைக்குண்டு அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் செல்வம், கிருஷ்ணகிரி மாவட்டம் காமன்தொட்டி உயர்நிலைப்பள்ளி தமிழ் ஆசிரியை ஜெயலட்சுமி ஆகியோர் கள ஆய்வு செய்ததில் தங்கம்மாள்புரத்திலிருந்து வருஷநாடு செல்லும் வழியில் உச்சிப் பிள்ளையார் கோயில் இருக்கும் இடத்தில் கி.பி., 13ம் நூற்றாண்டைச் சேர்ந்த சிவலிங்கம், பேச்சியம்மன் சிலை, அய்யனார், தட்சணாமூர்த்தி சுவாமி சிலைகள் இருப்பதை கண்டு பிடித்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:

பேச்சியம்மன் சிலை


தலையில் ஜூவாலை கிரீடம், இடது கையில் ஒரு பெண்ணை பிடித்து வயிற்றை கீரிய நிலையிலும், வலது கையில் ஒரு குழந்தையை ஏந்திய நிலையிலும், பயமுறுத்தும் கண்கள், அகன்ற மூக்கு, நீளமான வாய், பெரிய காதுகள், புடைத்த மார்பகங்கள், பெரிய பரந்த பாதங்கள், மார்புக்கூடு எலும்புகள் தெரியும் வகையில் பார்ப்போரை பயமுறுத்தும் வகையில் சிற்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பேச்சு அம்மன் என்பதே பேச்சியம்மன் என்று மறுவி விட்டது. கல்விக்கடவுளான சரஸ்வதியின் மறு தோற்றமாக கருதப்படும் இந்த அம்மனை வழிபட்டால் மாணவர்கள் தங்கள் கல்வியில் சிறப்பான இடத்தை பெற முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. பேச்சியம்மனுக்கு தமிழ்நாட்டில் மட்டுமல்ல கேரளா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா போன்ற வெளிநாடுகளிலும் வழிபாடு உள்ளது.

அய்யனார் சிலை


மண்டலமர்வு எனும் உத்குடி ஆசனத்தில் சிற்பம் வடிவமைப்பது உண்டு. ஆனால் இங்குள்ள சிற்பம் பேரரசமர்வு என்னும் மகாராஜா லீலாசனத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. செவ்வக பீடம் மீது இடக்காலை பக்கவாட்டில் குத்திட்டு வலக்காலை தாழவிட்டு தனித்திருக்கும் அய்யனாரின் வலது கையில் சாட்டை போன்ற செண்டையும், இடது கை முழங்கால் முட்டி மீதமைந்து பக்கவாட்டில் நீண்டு தொங்கும் நிலையில் உள்ளது. தலையில் விரித்த அலங்கார ஜடாபாரம், தனித்தனி இழைகளாக சுருண்டு அழகுற அமைந்துள்ளது.

முத்துப்பட்டம், வட்டமான பத்திர குண்டலம், கண்டசரம், சர பள்ளி, சவடி, பூணூல், உத்தரபந்தம், கடகம், கைவளை, காப்பு, இடைக்கச்சை போன்ற அணிகலன்கள் அணிந்து அய்யனார் அழகுற அமர்ந்திருக்கிறார். இவர் சிவபெருமானின் மகன் என்றும் கிராமங்களில் வசிக்கும் ஏழை எளிய மக்களை காக்க வந்தவர் என்றும் நம்பப்படுகிறது. சங்க காலம் முதலே தமிழகத்தில் அய்யனார் சிலை வழிபாடு உள்ளது. கேரளா, இலங்கை, அந்தமான் போன்ற இடங்களிலும் வழிபாடு உள்ளது.

தட்சிணாமூர்த்தி சிலை


சிவனின் அம்சமான தட்சிணாமூர்த்தி வடிவமானது இடது காலை மடக்கி வலது காலை தொங்கவிட்ட சுகாசன நிலையில் அமர்ந்துள்ளார். பூணூல் அணியப்பட்டுள்ளது. கரந்தை மகுடம், கைகளில் வளையல், கால்களில் வீரக்கழல், கால் விரல் அணிகள், அபய வரத முத்திரையுடன் பின் வலது கையில் மழு உள்ளது.

இடது மேற்கையில் மான் உருவம் சிதைந்துள்ளது. சாந்த சொரூப நிலையில் சிற்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது. 'தெக்கினான்' என்றும் தென்முகக் கடவுள் என்றும் அழைக்கப்படும் தட்சிணாமூர்த்தி, சிவனின் அம்சமாக கருதப்படுகிறார். மேற்கண்ட சிற்பங்கள் பாண்டியர் காலத்துக்கே உரிய சிற்ப நுட்பத்துடன் உச்சபட்ச நயத்துடன் செதுக்கப்பட்டிருக்கின்றன.

சிவலிங்கம்


பத்ம பீடம், அதாவது தாமரைப் பூ கவிழ்ந்த நிலை, அதற்கு மேல் ஆவுடையும், லிங்க பாணம் இல்லாமலும் உள்ளது. கி.பி.,17ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு ஒன்றும் உள்ளது. அதில் மதுரை சொக்கநாதருக்கும் பார்வதி அம்மனுக்கும் நெய் விளக்கு தானமாக வழங்கப்பட்ட செய்தி கூறப்பட்டுள்ளது. மேற்கண்ட சிலைகள் மற்றும் கல்வெட்டு மூலம் இந்த இடத்தில் சிவன் கோயில் இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. பாண்டியர் காலத்திலிருந்து நாயக்கர் காலம் வரை தொடர் வழிபாட்டில் இக்கோயில் இருந்துள்ளது என்பதை அறிய முடிகிறது. இவ்வாறு தெரிவித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us