/உள்ளூர் செய்திகள்/தேனி/ மத்திய அரசின் திட்டத்தில் கடன் பெற்று தருவதாக கூறி கிராம மக்களிடம் வசூல் மத்திய அரசின் திட்டத்தில் கடன் பெற்று தருவதாக கூறி கிராம மக்களிடம் வசூல்
மத்திய அரசின் திட்டத்தில் கடன் பெற்று தருவதாக கூறி கிராம மக்களிடம் வசூல்
மத்திய அரசின் திட்டத்தில் கடன் பெற்று தருவதாக கூறி கிராம மக்களிடம் வசூல்
மத்திய அரசின் திட்டத்தில் கடன் பெற்று தருவதாக கூறி கிராம மக்களிடம் வசூல்
ADDED : ஜூலை 28, 2024 04:18 AM
ஆண்டிபட்டி : பாரதப் பிரதமரின் விஸ்வகர்மா யோஜனா திட்டத்தில் பயிற்சி, மானியத்துடன் கடன் பெற்று தருவதாக பொதுமக்களை ஏமாற்றி பணம் வசூலித்தவர்களிடம் ஆண்டிபட்டி தாசில்தார் கண்ணன், மற்றும் போலீசார் விசாரிக்கின்றனர்.
ஆண்டிபட்டி ஒன்றியம், சக்கம்பட்டி, ஆண்டிபட்டி, முத்துகிருஷ்ணாபுரம், டி.ராஜகோபாலன்பட்டி, லட்சுமிபுரம் உட்பட பல கிராமங்களில் குலத்தொழில் செய்பவர்களுக்கு பாரத பிரதமர் விஸ்வகர்மா யோஜனா திட்டத்தில் பயிற்சி மற்றும் கடன் பெற்று தருவதாக சிலர் நோட்டீஸ் வினியோகித்துள்ளனர். தேனி கோடங்கிபட்டியைச் சேர்ந்த ஆரோக்கிய மேரி, கோட்டூர் ஜெஸ்சிதா, தேனி நந்தினி ஆகியோர் நேற்று ஆண்டிபட்டி அருகே முத்துகிருஷ்ணாபுரத்தில் வயதானவர்களை சந்தித்துள்ளனர். குலத்தொழில் மற்றும் கைவினை தொழிலாளர்கள் உட்பட 17 வகை தொழில் செய்பவர்களுக்கு இ- சேவை மையத்தில் பதிவு செய்து ஐந்து நாட்கள் பயிற்சியும்,தொழில் துவங்க முதல் கட்டமாக ரூ.ஒரு லட்சமும், 2ம் கட்டமாக ரூ.2 லட்சமும் பெற்றுத் தரப்படும் என விண்ணப்பிக்க கூறி உள்ளனர்.
பொதுமக்கள் விண்ணப்பம் செய்ய வசதியாக திண்டுக்கல்லை சேர்ந்த சுதாகர் தனது பெயரில் உள்ள இ சேவை மையத்திற்கான ஐ.டி.,யை கொடுத்துள்ளார். கிராமங்கள் தோறும் செல்லும் பெண்கள் அங்குள்ள பொதுமக்களிடம் ரூ.100 வசூலித்து ஆதார் எண், வங்கி கணக்கு, மொபைல் எண் ஆகியவற்றை சுதாகரின் இ சேவை ஐ.டி., நம்பரை பயன்படுத்தி பதிவு செய்து வந்தனர். ஒரு கிராமத்தில் 30 முதல் 50 நபர்களிடம் பதிவு செய்து தினமும் ரூ.20 ஆயிரம் வரை வசூலித்து வந்துள்ளனர்.தகவல் அறிந்த ஆண்டிபட்டி தாசில்தார் கண்ணன், வி.ஏ.ஓ., தேவி ஆகியோர் வசூலில் ஈடுபட்ட மூன்று பெண்களையும் ஆண்டிபட்டி போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றனர். விசாரணையில், திண்டுக்கல்லை சேர்ந்த சுதாகர் என்பவர் தேனி கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரியும் ஆனந்தராஜ் மூலம் இ சேவை மையம் துவங்க அதற்கான ஐ.டி., பெற்றுள்ளார். சுதாகர் அவருக்கு கீழ் ஆரோக்கியமேரி , ஜெஸ்சிதா, நந்தினி உட்பட 9 பேரை மாதம் ரூ.9000 சம்பளத்தில் வேலைக்கு வைத்திருப்பதும் இந்த 9 பேரும் கிராமம் தோறும் பொதுமக்களிடம் பொய்யான தகவல்களை கூறி பணம் வசூலித்ததும் தெரிய வந்துள்ளது. மத்திய அரசின் திட்டத்தை மக்களிடம் தவறான வழியில் கூறி அவர்களிடம் பணம் வசூலித்து ஏமாற்றுவோர் மற்ற பகுதியில் உள்ளனரா என விசாரணை நடந்து வருகிறது.