ADDED : ஜூன் 03, 2024 03:51 AM
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி நகர், கிராமங்களை ஒட்டி உள்ள பொது இடங்களில் கோழி இறைச்சி கழிவுகளை கொட்டிச் செல்வதால் பொது மக்களுக்கு சுகாதார பாதிப்பு ஏற்படுகிறது.
ஆண்டிபட்டி பேரூராட்சி, அதை ஒட்டியுள்ள கிராம ஊராட்சிகளில் 500க்கும் மேற்பட்ட இடங்களில் பிராய்லர் கறிக்கோழி கடைகள் செயல்படுகின்றன. பொது இடங்களில் முறையான அனுமதி இன்றி பலரும் கறிக்கோழி கடைகளை நடத்தி வருகின்றனர். கடைகளில் இருந்து வெளியேறும் கழிவுகளை உரிய முறையில் அப்புறப்படுத்தாமல் நீர் வரத்து ஓடைகள், கண்மாய்கள், பொது இடங்களில் கொட்டிச் செல்கின்றனர். நோய் பாதித்து இறந்த கோழிகளையும் அவற்றுடன் சேர்த்து விடுகின்றனர். பொது இடங்களில் கொட்டப்படும் கழிவுகள் குறித்து பேரூராட்சி நிர்வாகம், ஊராட்சி நிர்வாகங்கள் கண்டு கொள்வதில்லை. கடைகளில் இருந்து வெளியேறும் கழிவுகளை மொத்தமாக சேகரித்து மண்ணில் புதைக்கவோ, எரிக்கும் நடவடிக்கைக்கோ சுகாதாரத் துறையினர் அறிவுறுத்த வேண்டும். பொது இடங்களில் கழிவுகளை கொட்டி பாதிப்பு ஏற்படுத்துபவர்கள் மீது அபராதம் விதிக்க உள்ளாட்சி நிர்வாகங்கள் முன்வர வேண்டும்.