Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/ ஓய்வு பெற்ற ஐ.ஐ.டி., பேராசிரியையிடம் ரூ.84.50 லட்சம் மோசடி: டில்லி நபர் கைது

ஓய்வு பெற்ற ஐ.ஐ.டி., பேராசிரியையிடம் ரூ.84.50 லட்சம் மோசடி: டில்லி நபர் கைது

ஓய்வு பெற்ற ஐ.ஐ.டி., பேராசிரியையிடம் ரூ.84.50 லட்சம் மோசடி: டில்லி நபர் கைது

ஓய்வு பெற்ற ஐ.ஐ.டி., பேராசிரியையிடம் ரூ.84.50 லட்சம் மோசடி: டில்லி நபர் கைது

ADDED : ஜூலை 29, 2024 11:19 PM


Google News
Latest Tamil News
தேனி : ஓய்வு பெற்ற ஐ.ஐ.டி., பெண் பேராசிரியரிடம் ரூ.84.50 லட்சம் மோசடி செய்த டில்லியை சேர்ந்த அபிஜித்சிங்கை 36 தேனி சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

தேனி மாவட்டம், கெங்குவார்பட்டியை சேர்ந்தவர் பானுமதி 74. சென்னை ஐ.ஐ.டி., மற்றும் அமெரிக்கா வடக்கு கரோலினா பல்கலையில் முதுநிலை ஆராய்ச்சியாளராக பணியாற்றி ஓய்வு பெற்று வீட்டில் உள்ளார்.

2023 மே 18 ல் இவரின் அலைபேசி எண்ணில் தொடர்பு கொண்ட நபர்கள், 'மும்பை போலீஸ் ஸ்டேஷனில் இருந்து பேசுகிறோம். உங்கள் ஆதார் எண் மூலம் ஒரு சிம்கார்டு வாங்கப்பட்டுள்ளது. அந்த 'சிம்' பயன்படுத்தப்பட்ட வாட்ஸ் ஆப் மூலம் ஆபாச புகைப்படங்கள் பொது மக்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

மேலும் மும்பை கனரா வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்டு, அதில் கோடிக்கணக்கில் ஹவாலா பணப்பரிவர்த்தனை நடந்துள்ளது. இதுகுறித்து ஒரு நபரை நாங்கள் கைது செய்துள்ளோம். இதில் உங்களுக்கும் தொடர்பு இருக்கிறது. அதனால் உங்களை டிஜிட்டல் நடைமுறையில் கைது செய்துள்ளோம்' எனக் கூறியுள்ளனர்.

பின், அவரை வீட்டின் தனியறையில் அமரவைத்து, ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை இருப்பிடம் குறித்து விபரங்கள் அளிக்க அறிவுறுத்தினர். மேலும் எங்கள் வழக்கு விசாரணை முடியும் வரை வேறு நபர்களை தொடர்பு கொள்ளக்கூடாது என்றும் தெரிவித்துள்ளனர்.

பின் போராசிரியரின் வங்கிக்கணக்கு பரிவர்த்தனையை சோதனையிட உள்ளோம் எனக்கூறி, வங்கிக்கணக்கில் இருக்கும் பணத்தை மற்றொரு வங்கிக்கணக்கில் அனுப்பி வைக்கக்கூறினர்.

இதனால் அவர்கள் போலீசார்தான் என நம்பிய பேராசிரியை, அவர்கள் கூறிய வங்கிக் கணக்கில் ரூ.84.50 லட்சத்தை அனுப்பி வைத்தார். பின் பேராசிரியரிடம் பேசிய அனைவரும் அலைபேசியை சுவிட்ச் ஆப் செய்து விட்டனர். இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பேராசிரியை தேனி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.

எஸ்.பி., சிவபிரசாத் உத்தரவில் டில்லி துவாரகாவில் உள்ள சித்ரகூட் தாம் குடியிருப்பில் வசிக்கும் அபிஜித்சிங்கை போலீசார் கைது செய்து, துவாரகா நீதிமன்றத்தில் ஆஜர் செய்து தேனி அழைத்து வந்து சிறையில் அடைத்தனர்.

103 டெபிட், கிரிடிட் கார்டுகள் பறிமுதல்


கைதானவரிடம் இருந்து ரூ.44,000 பணம், ஐந்து அலைபேசிகள், ஒரு லேப்டாப், 103 டெபிட் மற்றும் கிரிடிட் கார்டுகள், 28 'செக்' புத்தகங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன. அபிஜித்சிங் மற்றும் அவருடைய தொடர்பில் உள்ள நபர்களின் வங்கிக்கணக்குகள் ரூ.1 கோடி முடக்கப்பட்டு உள்ளன. வேறு நபர்கள் குறித்து மேல் விசாரணை நடக்கிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us