Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/ விலை குறைவால் வாழை இலைகள் அறுவடை செய்ய தயக்கம் : ரூ.2000 விற்ற ஒரு கட்டு ரூ.200க்கு விற்பதால் பாதிப்பு

விலை குறைவால் வாழை இலைகள் அறுவடை செய்ய தயக்கம் : ரூ.2000 விற்ற ஒரு கட்டு ரூ.200க்கு விற்பதால் பாதிப்பு

விலை குறைவால் வாழை இலைகள் அறுவடை செய்ய தயக்கம் : ரூ.2000 விற்ற ஒரு கட்டு ரூ.200க்கு விற்பதால் பாதிப்பு

விலை குறைவால் வாழை இலைகள் அறுவடை செய்ய தயக்கம் : ரூ.2000 விற்ற ஒரு கட்டு ரூ.200க்கு விற்பதால் பாதிப்பு

ADDED : ஜூலை 05, 2024 05:30 AM


Google News
ஆண்டிபட்டி பகுதியில் புள்ளிமான்கோம்பை, தர்மத்துப்பட்டி, மூனாண்டிப்பட்டி, அணைக்கரைப்பட்டி, வெள்ளையத் தேவன்பட்டி, குன்னூர், அரப்படித்தேவன்பட்டி, கரட்டுப்பட்டி, ஸ்ரீரங்கபுரம், அய்யணத்தேவன்பட்டி வேகவதி ஆசிரமம் உட்பட வைகை ஆற்றின் கரையோர கிராமங்களில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் வாழை சாகுபடி உள்ளது. ஓராண்டு பயிரான வாழையில் இலைகள், காய்கள் மூலம் கணிசமான வருவாய் கிடைக்கும். பணப்பயிரான வாழையில் இலை, காய்கள் பறிப்புக்கு 6 முதல் 10 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டும். நீர் செழிப்பான பகுதிகளில் வாழை சாகுபடி ஆண்டு முழுவதும் தொடர்கிறது. கடந்த சில வாரங்களுக்கு முன் ஆண்டிபட்டி பகுதியில் வீசிய சூறைக்காற்று பலத்த மழையால் வாழை மரங்களுக்கு சேதம் ஏற்பட்டு விளைச்சல் பாதித்துள்ளது.

இந்நிலையில் தற்போது வாழை இலைகளுக்கு தேவை குறைவால் விலை குறைந்துள்ளது. சில மாதங்களுக்கு முன் 36 மடிகள் கொண்ட வாழை இலைக் கட்டு ரூ.2000 வரை விலை இருந்தது. தற்போது முகூர்த்த சீசன் இல்லாததால் வாழை இலைக்கான தேவை குறைந்து தரத்திற்கு ஏற்ப கட்டு ரூ.200 முதல் 400 வரை உள்ளது. வாழை இலை விலை குறைவு விவசாயிகளுக்கு கடும் பாதிப்பு ஏற்படுத்தி உள்ளது.

வாழை இலை வியாபாரி ஆண்டிபட்டி ஜெயபால் கூறியதாவது: தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டி, கம்பம், போடி, பெரியகுளம் பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் வாழை சாகுபடி உள்ளது. இப்பகுதியில் பறிக்கப்படும் வாழை இலைக்கட்டுகள் சென்னை, மதுரை மார்க்கெட்டுகள் உட்பட தமிழகம் முழுவதும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. விவசாயிகளுக்கு அறுப்பு கூலியாக இலைக்கட்டுக்கு ரூ.200, போக்குவரத்து செலவு ரூ.50 ஆகிறது. விற்பனை விலையை விட செலவு அதிகமாவதால் இலைகள் அறுப்பை தவிர்த்துள்ளனர்.

தற்போது காற்றின் வேகத்தால் இலைகள் கிழிந்து அதிகம் சேதமாகிறது. ஆடிப்பெருக்கில் இலைகளுக்கான தேவை அதிகமாகும். அதனைத் தொடர்ந்து ஆவணியில் முகூர்த்த சீசன் துவங்கிவிடும். தேவை அதிகரிப்பால் விவசாயிகளுக்கு கூடுதல் விலை கிடைக்கும். சமீபத்தில் சூறைக்காற்று, மழையால் வாழை மரங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டதால் தற்போது வாழைக்காய்கள் விலை உயர்ந்துள்ளது என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us